'சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!'
'சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!'
ADDED : அக் 01, 2024 01:04 AM

சென்னை : “எந்த ஒரு சவாலாக இருந்தாலும், அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓரணியாக நின்று செயல்பட்டால், அதில் வெற்றி, 100 சதவீதம் சாத்தியம்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், அனைத்து துறை செயலர்கள் பங்கேற்றனர்.
பெரும் சேதம்
கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழையானது, பருவம் முழுதும் பரவலாக பெய்தது. காலநிலை மாற்றத்தால், சமீபகாலமாக சில நாட்களிலேயே மொத்தமாக பெய்து விடுகிறது.
இன்னும் சொல்லப் போனால், சில மணி நேரங்களிலேயே, பருவ காலத்திற்கான மொத்த மழையும் கொட்டித் தீர்த்து விடுகிறது.
இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது.
சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், கடந்த ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதை, தமிழக அரசு திறம்பட எதிர்கொண்டதன் காரணமாக, பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள், விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பின.
அதேபோல இந்த ஆண்டும், பேரிடர்களின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை, தமிழிலேயே அறிந்துகொள்ள, TN-Alert' என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாநகரங்கள், இந்த காலக்கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டிற்கு முன்னுதாரணமாக, சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு வார்டு, தெரு வாரியான வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க, சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் போது, தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் முன்கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம்.
உயிரிழப்பு கூடாது
வெள்ளம் ஏற்பட்டதும், அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவாக செயல்பட வேண்டும். ஓர் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.
வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே, விரைவாக முடிக்க வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மழைக்கு முன்னதாக தங்கள் பணிகளை துவக்க வேண்டும்.
வெள்ளக்காலம் என்றாலே, மாணவர்கள் ஆர்வத்தால் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று விளையாடுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களில், தகவல் தொடர்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை, முடிந்தவரை தடையின்றி வழங்க வேண்டும்.
குடிநீர், பால், உணவு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, உரிய மருத்துவ சேவைகளை, சுகாதாரத் துறை வழங்க வேண்டும்.
100 சதவீதம் வெற்றி
பேரிடர் மேலாண்மையில், தன்னார்வலர்கள் பங்கு அவசியம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற, மாவட்ட நிர்வாகம் முறையான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். எந்த ஒரு சவாலாக இருந்தாலும், அனைவரும் ஒருமித்த கருத்தோடு, ஓரணியாக நின்று செயல்பட்டால், அதில் வெற்றி, 100 சதவீதம் சாத்தியம்.
எனவே, பருவ மழையால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு, பொதுமக்கள் துயர் துடைக்க, அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.