சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை: கார்த்தி
சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை: கார்த்தி
ADDED : நவ 23, 2025 10:13 PM

திருப்புத்தூர் : ''தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை,'' என,காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் அவர் அளித்த பேட்டி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஏற்கக் கூடியதே. ஆனால் வாக்காளர் நீக்கப்பட தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அளிக்க வேண்டும். முப்பது நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலை திருத்த முடியுமா என்பது தான் கேள்வி. தேர்தல் கமிஷனுக்கு, 2026ல் தமிழக சட்டசபைத்தேர்தல் வரும் என்பது தெரியும். 2025 ஜனவரியிலேயே சிறப்பு தீவிர திருத்தப் பணியை துவக்கியிருக்கலாம். திருத்தப் பணிக்கான ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வாக்காளர்களின் சந்தேகங்களை தீர்க்க முடியவில்லை. வாக்காளர் திருத்தம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை.
பீஹார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தமிழர்கள் பீகாரிகளை அடிக்கிறார்கள் எனக் கூறினார். தமிழகத்தில் தேர்தல் வந்தால் 'தமிழ் கற்றுக் கொள்ளவில்லையே' என அங்கலாய்க்கிறார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவருக்கு பிடித்த உணவு கேரளா, தமிழ்நாடு, அஸ்ஸாம், பெங்கால், புதுச்சேரி சாப்பாடு தான். அந்த மாநிலங்களின் நடனம், கலாசாரம், மொழிதான் அவருக்கு பிடிக்கும். அந்த ஆடைகள் தான் அவருக்கு பிடிக்கும்.
என்னைப் பொறுத்தவரை, சென்னையைத் தவிர தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்ற நகர்களுக்கு தேவையில்லை. இந்தூர், ஆக்ரா போன்றவற்றில் போடப்பட்ட மெட்ரோ திட்டங்களும் வீணாகி விட்டது.தமிழகத்தில் எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும், தி.மு.க., தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். இவ்வாறு கார்த்தி கூறினார்.

