PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM
உலகில், வீட்டுக்கு ஒருவர் ரத்தக் கொதிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார்; கூடவே சர்க்கரை நோயும் இருந்து விட்டால், சிறுநீரகச் செயலிழப்பு, இதயச் செயலிழப்பு என்று மரணத்தை நோக்கி சென்று விடுகின்றனர். இவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதாரச் சீரழிவாலும், அன்புக்குரியவரை இழந்த துக்கத்தாலும் தவிக்கும் தவிப்பை சொல்லி மாளாது.
சிறுநீரகச் செயலிழப்பும், இதயச் செயலிழப்பும் ஒருவரை, ஐ.சி.யு.,வில் தீவிர சிகிச்சை மேற்கொள்ள தள்ளிவிட்டு விடுகின்றன; ஏகப்பட்ட செலவையும் இழுத்து விடுகின்றன.
இவ்விரண்டு இறுதி நிலை நோய்களை எளிமையாக, இன்றைய நவீன மருந்துகளால் கட்டுப்படுத்தி, மரணத்திலிருந்து காப்பாற்றி, மக்கள் சொத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயால் வரும் இதயச் செயலிழப்புக்கு அரியதொரு மருந்துகள், 'எஸ்.ஜி.எல்.டி., 2 தடுப்பான்கள் மற்றும் சாகுபிட்ரால் வால்சார்டான்!'
இதயச் செயலிழப்பு என்பது இதயம் திறமையாக ரத்தத்தை இடது அறையிலிருந்து வெளியேற்றுவதில் ஏற்படும் குறைபாடு. இந்த இரண்டு மருந்துகள், வெவ்வேறு முறையில் செயல்படுகின்றன; இதயச் செயலிழப்பை தீவிரமாக தடுத்து உயிரைக் காக்கின்றன.
எஸ்.ஜி.எல்.டி., 2 தடுப்பான்கள்
1. டாக்சுலா
இந்த மருந்தின் முக்கிய வேலை, இரண்டாம் வகை சர்க்கரை நோயை சிறப்பாக குணப்படுத்துவதே. இதன் மூலம் இதயச் செயலிழப்பை தடுக்கிறது.
இதயத்திலிருந்து ரத்தத்தின் குறைந்த மற்றும் அதிகமான வெளியேற்றங்களை துல்லியமாகக் கட்டுப்படுத்தி சாதாரண நிலைக்கு கொண்டு வருவது தான், இந்த மருந்தின் சிறப்பு தன்மை! இந்த மருந்து, ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் என்ற சர்க்கரையை வெளியேற்றுவதால், சர்க்கரை அளவு குறைகிறது.
ரத்தத்தில் உயர்ந்த குளூக்கோஸ் அளவு, இதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வெகுவாகக் குறைக்கும்; ஆரோக்கியத்தைக் குறைக்கும். இதனால் சிறுநீரகச் செயலிழப்பும், இதயச் செயலிழப்பும் ஏற்படுகின்றன.
கட்டுக்குள் அடங்காத சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, இதயம் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டின் விபரீத விளைவுகளை குறைத்து உயிரைக் காப்பாற்றுகிறது டாக்சுலா மருந்து.
* டாக்சுலா மருந்தை உட்கொள்வதால், அடிக்கடி மருத்துவமனையில் சேர்வது தடுக்கப்படும்
* இதயத்தின் மேல் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது
* இதய தசைகள் வலுவிழந்து 'பைப்ரோசிஸ்' ஆவதை தடுக்கிறது
* வீக்கம், ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கிறது. இது, சர்க்கரை வியாதி இல்லாமல் இதயச் செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கிறது.
2. சாகுபிட்ரால்- -
- வால்சார்டான்
பிற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கும், குறைந்தளவு ரத்தம் வெளியேறும் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த மருந்து மிகச் சிறப்பானது.
நெப்ரிலிசின் தடுப்பான்கள்
1.இந்த வகை மருந்துகள், ரத்தத்தில் சோடியம் என்ற உப்பையும், நீரையும் சமநிலையில் வைக்க உதவுகின்றன; அதிகப்படியான உப்பும், நீரும் வெளியேற்றப்படுகின்றன.
2.ரத்தக் குழாய்களை விரிவடைய வைப்பதால், ரத்த அழுத்தத்தையும், இதயச் செயலிழப்பையும் துல்லியமாகக் குறைக்கிறது. இந்த மருந்துகள் இன்று சாதாரணமாக கொடுக்கப்படும், 'டெல்லிமி ஸ்டார்ட்டன்' என்ற தடுப்பான் மருந்தை விட மிகச் சிறந்தவை.
பெரும்பான்மையான நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு, இறுதிக் கட்டத்தில் இதயச் செயலிழப்பு ஏற்படும். இது, 'ரீனோ கார்டியாக் சின்ட்ரோம்' என்றழைக்கப்படும். நாள்பட்ட இறுதிக்கட்ட இதய நோயாளிகளுக்கு, இதயச் செயலிழப்போடு சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படும். இதற்கு, 'கார்டியோ ரீனல் சின்ட்ரோம்' என்று பெயர்.
நெப்ரிலிசின் தடுப்பான்களை பயன்படுத்தினால், இவ்வகை பிரச்னைகளிலிருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.