அமைச்சர் பேசியும் கேட்காத சி.ஐ.டி.யு.,: தொடருது சாம்சங் தொழிலாளர் ஸ்டிரைக்
அமைச்சர் பேசியும் கேட்காத சி.ஐ.டி.யு.,: தொடருது சாம்சங் தொழிலாளர் ஸ்டிரைக்
UPDATED : அக் 04, 2024 06:05 AM
ADDED : அக் 04, 2024 01:54 AM

தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர்கள், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சை கேட்க மறுப்பதால், சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், 25வது நாளாக தொடர்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில், எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் சாம்சங் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 2,552 தொழிலாளர்கள் பணி
புரிகின்றனர்.
போராட்டம்
இவர்கள், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களின் முக்கிய கோரிக்கையான சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதை, ஆலை நிர்வாகம் ஏற்கவில்லை.
'எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எதிலும் தொழிற்சங்கங்கள் இல்லை. எனவே, தொழிற்சங்கத்தை அனுமதிக்க இயலாது.
'ஊழியர்கள் தரப்பில், ஏழு பேர் கமிட்டி அமையுங்கள். அதன் வழியாக கோரிக்கைகளை கூறுங்கள். அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம். ஊழியர்கள் அல்லாத நபர்கள் பேச்சுக்கு வரக் கூடாது' எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதை ஏற்காத 50 சதவீத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.
தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில் பல்வேறு வகையான போராட்டங்களும் நடத்தப்பட்டன.ஆலை நிர்வாகம் தரப்பில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு, இரண்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
'அனைத்து பிரச்னைகளையும் பேச்சு வழியே தீர்க்க முடியும். எனினும் சிலர், தொடர்ந்து சட்ட விரோத வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு செப்., 23 முதல் அடையாள அட்டை முடக்கப்படும்.
வருகைப் பதிவு
'பணிக்கு வருவோரை தடுத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி போனஸ், ஊழியர்களின் வருகைப் பதிவுக்கு ஏற்ப வழங்கப்படும்' என, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தினர்; தீர்வு ஏற்படவில்லை. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. இது, அரசுக்கு பின்னடைவாக உள்ளது.
முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், பிரபலமான சாம்சங் தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடப்பது, முதலீட்டாளர்கள் தமிழகம் வருவதை பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது ஊழியர்கள் கோரிக்கை. அதை தவிர மற்றதை பேசலாம் என்பது ஆலை நிர்வாகத்தின் நிபந்தனை.
அமைச்சர் பேசியும், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. இதனால், இழுபறி நீடிக்கிறது. எனினும் இருதரப்பிலும் உடன்பாடு ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -