ஒருங்கிணைப்புடன் செயல்படுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை
ஒருங்கிணைப்புடன் செயல்படுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை
ADDED : ஜூலை 17, 2025 09:57 PM
சென்னை:'மின் வாரியம், குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ், 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகள் உள்ளன. இவற்றில், மழைநீர் கால்வாய், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, தலைமை செயலர் முருகானந்தம், நிதித்துறை செயலர் உதயசந்திரன், நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக, மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், துப்புரவு பணிகள், தெரு விளக்குகள் பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
சட்டசபையில் வெளியிடப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் பணிகளை முடித்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
நான்கு ஆண்டுகளில், 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், 15 ஆயிரம் கி.மீ., சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நகர்ப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய குடிநீர் திட்டங்கள், மழைநீர் கால்வாய் பணிகள் போன்ற முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிதாக துவங்கப்பட்டுள்ள பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே முடிக்க வேண்டும். மின் வாரியம், குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
பருவமழை காலம் துவங்கும் முன், மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு, தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.
வெள்ள அபாயம் இருக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.