ADDED : டிச 21, 2024 12:19 AM
சென்னை:தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்கள் துவக்க, 856 பேர் விண்ணப்பித்த நிலையில், 83 பேருக்கு மருந்தகம் துவக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
'தமிழகத்தில், மூலப்பெயர் என்ற ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய, 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன. மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்ப்காப்ஸ், டாம்ப்கால், யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
தமிழகம் முழுதும், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள மருந்தியல் பட்டதாரிகள், கூட்டுறவுத்துறை வாயிலாக, https://mudhalvarmarundhagam.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை, 856 விண்ணப்பங்கள் கூட்டுறவுத்துறை வாயிலாக பெறப்பட்டு, மருந்து கட்டுப்பாட்டு துறை பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
இது குறித்து, மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு இயக்குனர் எம்.என்.ஸ்ரீதர் கூறியதாவது:
முதல்வர் மருந்தகம் துவங்க, 856 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 83 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 22 உரிமங்கள் வழங்கப்பட உள்ளன. 751 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அடுத்த மாதம் மருந்தகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.