சந்தேகங்களுக்கு பதில் கூறாமல் முதல்வர் தட்டிக் கழிக்கிறார்: உதயகுமார் குற்றச்சாட்டு
சந்தேகங்களுக்கு பதில் கூறாமல் முதல்வர் தட்டிக் கழிக்கிறார்: உதயகுமார் குற்றச்சாட்டு
ADDED : ஜன 09, 2025 06:38 AM

சென்னை: ''அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், சந்தேகங்களுக்கு பதில் கூறாமல், முதல்வர் தட்டிக் கழிக்கிறார்,'' என, எதிர்க்கட்சி துணைத் தலைவரான அ.தி.மு.க.,உதயகுமார் கூறினார்.
அ.தி.மு.க., வெளிநடப்பு செய்த பின், உதயகுமார் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலை மாணவி, டிச., 23ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதை, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
இதுகுறித்து, ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர். அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்படங்கள், கருணாநிதி நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை போலீஸ் கமிஷனர் அளித்த பேட்டியில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்ததாகவும், அண்ணா பல்கலை மாணவியும், பேராசிரியர் ஒருவரும் இணைந்து புகார் அளித்ததாக தெரிவித்தார்.
ஆனால், உயர்கல்வித் துறை அமைச்சரும், சட்டத் துறை அமைச்சரும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்தனர். அந்த பதற்றம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பல்கலையில் பாலியல் புகாரை விசாரிக்கும் குழுவுக்கு புகார் வரவில்லை என, உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இது சந்தேகத்தை மேலும் வலுவூட்டுவதாக அமைந்தது. குழந்தைகள், பெண்கள் மீதான குற்றம் தொடர்பான வழக்கில், முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆரை வெளியிடக் கூடாது.
இந்த வழக்கில் வெளியிடப்பட்டது, சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. முதல்வர் பதில் கூறுகையில், 'இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய தகவல் மையம் தான்' என, பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்.
தொடர் சம்பவங்களை பார்க்கும்போது, பெருத்த சந்தேகம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் புகாரில், குற்றவாளி, 'அந்த சாரோடு இருக்க வேண்டும்' என கூறியதாக தெரிவித்துள்ளார்.
அந்த சார் யார் என கேள்வி கேட்கும்போது, போலீஸ் கமிஷனர், 'குற்றவாளி ஒருவர்தான்' என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இது தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது; அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், தி.மு.க., நேற்று முன்தினம் போராட்டம் நடத்த, அனுமதி அளிக்கப்பட்டது.
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; அ.தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதி என, சட்டத்தை வளைக்கிற நடவடிக்கையை, அரசு எடுத்து வருகிறது.
முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்சென்றால், நீதி கிடைக்கும் எனக் கருதினோம். அவர் சம்பவத்தை நியாயப்படுத்துவதுபோல் பேசுகிறார்; அதில் உடன்பாடு இல்லை. முதல்வர் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்ததால், எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

