அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் எச்சரிக்கை
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் எச்சரிக்கை
UPDATED : மே 13, 2013 01:11 PM
ADDED : மே 13, 2013 01:06 PM

சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய தமிழக அரசு தயங்காது என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற வன்னியர் சங்கத்தினருக்கும், மரக்காணம் காலனி மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.
பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டனர். ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பா.ம.க.,வினர் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் பல பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மரங்களை வெட்டி சாய்த்தனர். இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமதாஸ் ஜாமினில் விடுதலையானார். தமிழக அரசு திட்டமிட்டு பா.ம.க.,வினர் மீது வழக்குப் போடுவதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சட்டசபையில் வடமாவட்டங்களில் நிலவும் பதட்டம் குறித்து காங்., கம்யூ., கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது : பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய தமிழக அரசு தயங்காது. தமிழக அரசும், போலீசும் திட்டமிட்டு வழக்கு தொடர்வதாக ராமதாஸ் பேசுவது அபத்தமானது. ஜாமினில் வெளிவந்த பின்னரும் பா.ம.க.,வினரை தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார். ராமதாஸ் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்படும். பா.ம.க.,வின் சட்டவிரோத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ராமதாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் பொதுச்சொத்துக்களுக்கு பா.ம.க.,வினர் சேதம் ஏற்படுத்தினர். கலவரத்தின் போது சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க.,விடமிருந்து நஷ்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்து கணக்கிடப்பட்ட பின்னர் பா.ம.க.,விடமிருந்து நஷ்ட ஈடு பெறப்படும்.
வன்முறையில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். மாநிலம் முழுவதும் 6994 பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5220 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். 20 பேர் குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையில் 853 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையில் பலநூறு கோடி சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பா.ம.க.,வினர் செய்த கலவரத்தில் டிரைவர் ஒருவர் மற்றும் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளனர். 111 பேர் காயமடைந்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக முறைப்படி தான் தெரிவிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது. அரசியல் கட்சிகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். ஆனால் பா.ம.க.,வினர் வன்முறையினர் ஈடுபட்டனர். இதனால் வடமாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையில் ஈடுபடும் எந்த அரசியல் கட்சிகளையும் தடை செய்ய அரசு தயங்காது என கூறினார்.
