தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
UPDATED : அக் 21, 2025 01:37 PM
ADDED : அக் 21, 2025 12:41 PM
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் நேற்றிரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. இதனால் மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையானது மேலும் தீவிரம் அடையும் சூழலில் மழை அதிகம் பெய்யும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களிடம் அவர் கேட்டறிந்தா. மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கனமழையால் -ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்க முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் கேட்ட போது, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய ஜேசிபி இயந்திரங்கள், படகுகள், மோட்டார் பம்புகள், மர அறுப்பான்கள்,லாரிகள், 51, 639 மின்கம்பங்கள், 1849 மின் மாற்றிகள், 1187 மின் கடத்திகள் போன்ற அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் நெல்கொள்முதல் பணிகளை தொய்வின்றியும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை துரிதப்படுத்திடவும் அறிவுறுத்தினார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.