பிரிட்டன் அமைச்சர் கேத்தரினுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை
பிரிட்டன் அமைச்சர் கேத்தரினுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை
UPDATED : செப் 05, 2025 01:30 AM
ADDED : செப் 05, 2025 01:09 AM

சென்னை:பிரிட்டன் நாட்டின் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் முகாமிட்டுள்ளார்.
விவாதித்தனர் அங்குள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், பிரிட்டன் அமைச்சரும், அந்நாட்டின் பார்லிமென்ட் துணை செயலருமான கேத்தரின் வெஸ்ட்டை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
பல்வேறு துறைகளில், தமிழகம் மற்றும் பிரிட்டனின் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, பசுமை பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் உற்பத்தி போன்றவற்றில் தமிழகத்தின் வலிமை குறித்து முதல்வர் எடுத்துரைத்தார். இந்த துறைகளில், பிரிட்டன் அதிக அளவிலான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உயர் கல்வி திறன் மேம்பாடு மற்றும் காலநிலை ஒத்துழைப்பில், பிரிட்டன் மற்றும் தமிழக உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், அப்போது விவாதிக்கப்பட்டது.
தமிழகம் முன்னணி பசுமை ஹைட்ரஜன், சூரியசக்தி மற்றும் காற்றாலை ஆற்றல் போன்றவற்றில், உலக அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவது குறித்தும் முதல்வர் விளக்கினார்.
காலநிலை மாற்ற உத்திகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதம் நடந்தது.
சந்திப்பின் போது, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் முதன்மை செயலர் உமாநாத், தொழில் துறை செயலர் அருண்ராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன இயக்குநர் தாரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.