ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்காக ரூ.1.25 கோடி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்காக ரூ.1.25 கோடி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : செப் 01, 2025 04:49 PM

பெர்லின்: ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்காக ரூ.1.25 கோடியை வழங்கியது திராவிட மாடல் அரசு என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணம் சென்றுள்ளார். அங்கிருந்த படியே தமிழக நிலவரங்களை கேட்டறிந்து அவ்வப்போது எக்ஸ் வலைதளத்தில் பதிவுகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
இன்று அவர் வெளியிட்ட பதிவு:
பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோனில் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு.
அது வீணாகவில்லை என்பதை இங்குள்ளோரின் தமிழார்வத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த கொலோன் நூலக பார்வை அமைந்தது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தமது பதிவில் கூறியுள்ளார்.
அவரின் வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ள கொலோன் என்ற நகரம், ஜெர்மனியில் உள்ள முக்கிய நகரமாகும், 2000 ஆண்டுகள் பழமையானது.