sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

/

தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு


ADDED : பிப் 09, 2025 12:57 AM

Google News

ADDED : பிப் 09, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை'''தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இதை, சில சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து, வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர்,'' என, முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, சென்னை அருகே ஆவடியில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும், தி.மு.க., வேட்பாளர், 'டிபாசிட்' இழக்கச் செய்துள்ளார்.

எதுவும் இல்லை


ஈ.வெ.ரா., மண்ணில் வெற்றி பெற்றுள்ளோம். மத்திய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பாராட்டியுள்ளனர்.

எல்லா துறைகளிலும் மேல் நோக்கிய வளர்ச்சியை தமிழகம் அடைந்து வருகிறது. இந்த சூழலில், தமிழக அரசுக்கு ஒத்துழைக்கக் கூடிய மத்திய அரசு இருந்திருந்தால், தமிழகம் இன்னும் வேகமாக வளர்ந்திருக்கும்.

கூட்டணி கட்சிகளின் தயவால், சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ள நிலையிலும், பாசிச, சர்வாதிகார, எதேச்சதிகார தன்மையை விட்டு இறங்காமல், பழையபடியே பா.ஜ., அரசு நடந்து வருகிறது. மதவாத அரசியலை நடத்தி, மக்களை ஒரே மயக்கத்தில் வைத்து, அரசியல் ஆதாயம் அடைய பா.ஜ., நினைக்கிறது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எதுவும் இல்லை. திருக்குறளை மேற்கோள் காட்டினால் போதும், தமிழகத்தை ஏமாற்றி விடலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நினைக்கிறார்.

தமிழகத்தின் பெயர் கூட மத்திய பட்ஜெட்டில் இல்லை. கல்விக்கு 2.3 சதவீதம், சுகாதாரத்திற்கு 1.8 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு 4.91 லட்சம் கோடி ரூபாய், உள்துறைக்கு 2.33 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியவர்கள், சமூக நலத்துறைக்கு வெறும் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். மக்கள் நலனில் பா.ஜ.,வுக்கு அக்கறை இல்லை என்பதற்கு, இதை விட சான்று தேவையில்லை.

மாநிலங்களுக்கு நிதி தராத மத்திய அரசு, மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் தருவதாக சொல்கிறது. மத்தியில் நடப்பது ஆட்சியா; வட்டி கடையா? பிள்ளையின் படிப்புக்கு, தந்தை கடன் தருவதாக சொன்னால் அது குடும்பமா?

இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ள தமிழகத்தை, தொடர்ந்து மத்திய அரசு வஞ்சிக்கிறது. பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காத மாநிலம் என்பதால், தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், தமிழகம் குறித்து தவறான எண்ணங்களை, தீய உள்நோக்கத்துடன் கவர்னர் ரவி பேசி வருகிறார்.

தமிழகத்திலிருந்து நிறைய தொழில் நிறுவனங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்வதாக ஆதாரமின்றி பேசுகிறார். அப்படி செல்ல வேண்டும் என்பது, அவரின் தீய எண்ணம்.

தமிழகத்தின் வளர்ச்சியை, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டுகிறது. எனவே, கவர்னர் ரவியின் பாராட்டு தேவையில்லை. 'நகர்ப்புற வளர்ச்சிக்கு சென்னை தான், இந்தியாவுக்கு முன்மாதிரி' என, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டிஉள்ளார்.

நீடிக்க வேண்டும்


வரும் 2026 சட்டசபை தேர்தல் வரை, கவர்னர் ரவியும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் நீடிக்க வேண்டும்.

அப்போது தான் பிரசாரம் செய்யாமலேயே, தி.மு.க., ஆட்சிக்கு வர முடியும். கவர்னர் உட்பட யாராலும், தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது; அது அவர்களுக்கும் தெரியும்.

அதனால் தான் குழப்பம் ஏற்படுத்த நினைக்கின்றனர். தமிழகத்தில் புதிய பிரச்னையை கிளப்பி, கலவரத்தை துாண்ட திட்டமிடுகின்றனர்.

பல்வேறு மதங்கள், ஜாதிகள், பழக்கவழக்கங்கள் இருந்தாலும், தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவரவர் கடவுள் அவரவர் நம்பிக்கை. எல்லா மதத்தின் விழாக்களும் தினமும் நடந்து வருகின்றன.

லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்; அமைதியாக வீட்டுக்கு செல்கின்றனர். ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு என, பகுத்தறிந்து பார்க்கும் மக்கள் வாழும் மாநிலம் தமிழகம்.

ஆன்மிகத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தும் தீய சக்திகளை, தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். பிற மதத்தினரின் உணர்வுகளை மதிப்பவர்களையே, தமிழக மக்கள் ஏற்பர்.

அதனால் தான், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இதை, சில சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து, வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர்.

அமெரிக்காவில் இருந்து, 104 இந்தியர்கள் கை, கால்களில் விலங்கு மாட்டி அனுப்பி வைத்த காட்சி, கண்ணீரை வரவழைக்கிறது. இதை நியாயப்படுத்தும் வகையில் வெளியுறவு அமைச்சர் பேசுகிறார்.

அமெரிக்க அதிபர், பிரதமர் மோடியின் நண்பர். அவருக்காக அமெரிக்கா சென்று பிரசாரம் செய்தார். இந்தியர்கள் விலங்கிட்டு அனுப்பப்பட்டதை, மோடி தடுத்திருக்க வேண்டும்.

நீங்கள் மேலே இருக்கிறீர்கள்; நாங்கள் கீழே இருக்கிறோம் என, ஆணவத்தில் ஆட வேண்டும். கீழே உள்ள வேர் வலுவாக இருந்தால் தான், மேலே நீங்கள் வலுவாக இருக்க முடியும்.

வளர்த்தெடுப்போம்


'என்னால் ஆனதை நான் செய்து விட்டேன். இனி டில்லி ஆனதை பார்க்கட்டும்' என, அண்ணாதுரை சொன்னார். மத்திய அரசின் தடைகளை மீறி, தமிழகத்தை வளர்த்தெடுப்போம்.

மத்திய அரசுக்கும், தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்த அ.தி.மு.க.,வுக்கும் பாடம் புகட்டும் தேர்தலாக, 2026 சட்டசபை தேர்தல் இருக்கும்.

கடந்த லோக்சபா தேர்தல் போல, வரும் சட்டசபை தேர்தலில் முழு வெற்றி பெறுவோம். இன்று நாங்கள் முன்மொழிவதை, நாளை இந்தியாவே முன்மொழியும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.






      Dinamalar
      Follow us