நுாற்றாண்டு பிறந்த நாள் ஹண்டே, சுவாமிநாதனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
நுாற்றாண்டு பிறந்த நாள் ஹண்டே, சுவாமிநாதனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
ADDED : நவ 27, 2026 06:56 PM
சென்னை: நுாற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடும், முன்னாள் அமைச்சர்கள் ஹண்டே மற்றும் சுவாமிநாதனை, முதல்வர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்தினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், புவனகிரி தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று, மதுவிலக்கு, கைத்தறி, செய்தி, சுற்றுலா, மின்சாரம் உள்ளிட்ட, 13 முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர் வி.வி.சுவாமிநாதன்.
இவர், 1927 பிப்ரவரி 15ம் தேதி பிறந்தவர். சிதம்பரம் நகராட்சி தலைவராக, இவர் பணியாற்றிய காலத்தில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக அறிந்து தீர்வு காண, புகார் பெட்டி முறையை அறிமுகப்படுத்தியவர். 1980ல் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.
அதேபோல, எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக பணியாற்றியவர் எச்.வி.ஹண்டே. போலியோ எனும் வாத நோய் ஒழிப்பு திட்டங்கள், தடுப்பூசி திட்டங்கள், தொழுநோய் கட்டுப்பாடு, தாய் சேய் நல மேம்பாடு, கிராம சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தியதற்காக, டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவர்.
இந்த ஆண்டு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கம்பராமாயணத்தை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர், 1927 நவம்பர், 28ம் தேதி பிறந்துள்ளார்.
நுாற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடும் இருவரையும் போற்றும் வகையிலும், அரசியல் சமூக வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும், இருவரையும் தலைமை செயலகத்திற்கு நேற்று அழைத்து, முதல்வர் விஜய் வாழ்த்தினார்.
அப்போது, எம்.ஜி.ஆர்., கையெழுத்திட்ட நுாறு ரூபாய் நோட்டை, முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் பிரபாகர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமை செயலர் சாய்குமார், சட்டசபை செயலர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
