ஒரு வழக்குக்கு 54 மடங்கு கட்டணமா? விழிபிதுங்கும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்
ஒரு வழக்குக்கு 54 மடங்கு கட்டணமா? விழிபிதுங்கும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்
ADDED : ஏப் 21, 2025 07:40 AM

சென்னை: நிலம் கையகப்படுத்துவதில் இழப்பீடு வழங்குவது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் ஒன்றில், எதிர் தரப்பினரின் எண்ணிக்கை அடிப்படையில், வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்க, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில், வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ., தொலைவுக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் பொறுப்பு, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, நிலம் கையகப்படுத்த, சி.எம்.டி.ஏ.,வில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இப்பிரிவு நிலம் எடுக்கும் பணிகளை மேற்கொண்டது.
மீஞ்சூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதில், ஒரு சென்டுக்கு, 65,375 ரூபாய், 66,956 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. எதை எதிர்த்து, நில உரிமையாளர்கள், 54 பேர், பொன்னேரி கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு சென்டு நிலத்திற்கு, 2.13 லட்ச ரூபாய் சந்தை மதிப்பு என நிர்ணயித்து, இரண்டு மடங்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சி.எம்.டி.ஏ.,வின் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில், கிளை நீதிமன்ற உத்தரவின் ஒருபகுதியை உயர் நீதிமன்றம் ஏற்று, 2023ல் புதிய உத்தரவை பிறப்பித்தது. இது நிலம் கையகப்படுத்தும் அலுவலர் நிர்ணயித்த தொகையை விட, நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாக, சி.எம்.டி.ஏ., கருதியது.
வழக்கில் பல்வேறு விஷயங்களை உயர்நீதிமன்றம் கவனிக்கவில்லை என்பதால் இதில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், சி.எம்.டி.ஏ.,வுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.டி.ஏ., தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஜி. இந்திரா வாயிலாக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் உத்தரவு எதுவும் வரவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் கட்டணத்துக்கான பில், சி.எம்.டி.ஏ.,வுக்கு வந்துள்ளது. அதில், 54 பேர் எதிர்தரப்பினராக இருப்பதால், தலா, 40,000 ரூபாய் என்ற அடிப்படையில், 21.60 லட்ச ரூபாய் கட்டணமாக அவர் கேட்டுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர் தரப்பினர், 54 பேர் இருந்தாலும் ஒரே தொகுப்பாக தான் இந்த வழக்கு நடத்தப்படுகிறது. அப்படி இருக்கும்போது, 54 மடங்கு கட்டணம் கேட்பது நியாயமா என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இதில் கேள்வி எழுப்பினர்.
இருப்பினும், இத்தொகையை கொடுப்பதற்கான பணிகளில், சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் வழக்கில் கிளை நீதிமன்றம், உயர் நீதிமன்ற தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக, இவ்வளவு தொகையை செலவு செய்து போராட வேண்டுமா என, நில உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.