உமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்த சம்பவம்; மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்
உமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்த சம்பவம்; மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்
ADDED : ஜூலை 14, 2025 09:10 PM

சென்னை: தமிழகம் முதல் காஷ்மீர் வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த சென்ற முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, போலீசாருக்கும், உமர் அப்துல்லாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. ஒரு கட்டத்தில் உமர் அப்துல்லாவை போலீசார் முன்னேறவிடாமல் தள்ளிவிட்டனர்.
இந்த வீடியோவை உமர் அப்துல்லா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். எந்த சட்டத்தின் கீழ் தன்னை தடுத்து நிறுத்தினர் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் உமர் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இப்படித் தான் நடத்த வேண்டுமா? என்றும் மத்திய அரசை கண்டித்துள்ளார். காவலர்கள் தம்மை நடத்திய விதத்தை வீடியோ மூலம் உமர் அப்துல்லா எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருந்தார்.
அதை தமது பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், உமர் அப்துல்லாவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவின் விவரம்;
ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதே தருணத்தில் அங்கு நடக்கும் தற்போதைய நிகழ்வுகள். அங்கே நிலைமை எந்தளவுக்கு மோசமாகிவிட்டன என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லா, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, சுவரேறி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்த வேண்டுமா?
இது ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு தலைவரின் பிரச்னை அல்ல. தமிழகம் முதல் காஷ்மீர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது.
காஷ்மீரில் இது நடக்க முடிகிறது என்றால் அங்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கும் இது போன்று நடக்கலாம். ஜனநாயகத்தின் ஒவ்வொரு குரலும் இதை கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

