கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ‛'ஸ்டிரைக்' இன்று துவக்கம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ‛'ஸ்டிரைக்' இன்று துவக்கம்
ADDED : அக் 21, 2024 12:48 AM

சிவகங்கை : ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இருமடங்கு அபராதம் விதிப்பதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் பி.காமராஜ் பாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:தமிழக அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை தொடக்க கூட்டுறவு மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செயல்படுகிறது. 25,000 விற்பனையாளர், எடையாளர்கள் பணிபுரிகின்றனர்.
ரேஷன் கடைகளில் எடை குறைவாக இருந்தால், விற்பனையாளர் மீது இரு மடங்கு அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். சில பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூறுகின்றனர்.
இவற்றில் காலாவதியான பொருட்களை திரும்ப பெறாமல், அதற்குரிய தொகையை விற்பனையாளரிடமே வசூலிப்பதை கண்டிக்கிறோம். பலசரக்கு பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிப்பதை கண்டிக்கிறோம்.
கடந்த காலங்களில் கூட்டுறவு மாவட்ட ஆட்சேர்ப்பு மையம் மூலம் தேர்வு செய்த விற்பனையாளர்களை 100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ரேஷன் கடைகளில் நியமித்துள்ளனர்.
புதிதாக உருவான மாவட்டங்களில் சொந்த மாவட்டத்தை விட்டு வெளிமாவட்டம் செல்லும் நிலை உள்ளது.
எனவே புதிதாக விற்பனையாளர் பணிக்கு ஆட்களை எடுக்கும் முன், ஏற்கனவே வெகு தொலைவில் உள்ள கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களை, குடும்பத்துடன் இருக்கும் வகையில் அருகில் உள்ள கடைகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தான் இன்று முதல் மாநில அளவில் அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், விற்பனையாளர், எடையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்றார்.