ADDED : அக் 10, 2024 12:30 AM

சென்னை: விவசாயிகளுக்கு உரிய விலை மற்றும் மக்களுக்கு குறைந்த விலையில், தரமான காய்கறி கிடைக்க கிராமங்களில், 'கூட்டுறவு சந்தை' அமைக்க, கூட்டுறவு துறை முடிவு செய்துஉள்ளது.
தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் மாவட்டங்களில், உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. அங்கு, விவசாயிகள் காய்கறி, பழங்களை கொண்டு வந்து, மக்களிடம் விற்கின்றனர்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில், விவசாயிகள் பயிர் கடன் வாங்கி, உழவு பணிகளில் ஈடுபடுகின்றனர். அந்த விவசாயிகளிடம் இருந்து காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்து, தமிழகம் முழுதும் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில், கூட்டுறவு துறை ஈடுபட்டுள்ளது.
இதற்காக, காய்கறி அதிகம் விளையும் மாவட்டங்களில் அவற்றை வாங்கி சென்னை, தஞ்சை, கன்னியாகுமரி என, அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில், காய்கனி வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
அந்த வழித்தடங்களில் உள்ள நகரங்களில், காய்கறி கடைகள் திறக்கப்பட உள்ளன. காய்கனி வழித்தடத்தில், 24 மணி நேரமும் கொள்முதல், காய்கறி, பழங்களை அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடக்க உள்ளன.
இதற்காக, மாவட்டங்களில் முக்கிய இடங்களில், 10 - 20 அங்காடிகள் இடம்பெறும் வகையில், 'கூட்டுறவு சந்தை' அமைக்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. அங்கு மக்களுக்கு தரமான காய்கறிகள், குறைந்த விலைக்கு விற்கப்படும்.
விவசாயிகளுக்கும் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும். முதல் கட்டமாக, 10 மாவட்டங்களில் கூட்டுறவுசந்தைகள் அமைக்கப்பட உள்ளன.
முதலாவது, கூட்டுறவு சந்தை, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள சின்னகல்ராயன் இடத்தில், 1,600 சதுர அடியில், 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

