10 மாதங்களில் ரூ.24 ஆயிரம் கோடி ஏற்றுமதி; கோவை மாவட்டம் அசத்தல்
10 மாதங்களில் ரூ.24 ஆயிரம் கோடி ஏற்றுமதி; கோவை மாவட்டம் அசத்தல்
ADDED : மே 06, 2025 06:03 AM

கோவை: கடந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், கோவை மாவட்டம் ரூ.23, 932 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 3.8 சதவீத வளர்ச்சியுடன், சுமார் ரூ.1,000 கோடிக்கு கூடுதலாக ஏற்றுமதி நடந்துள்ளது.
மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம், 2024---25ம் நிதியாண்டில் ஏப்., முதல் ஜன., வரையிலான 10 மாதங்களில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த, புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, குஜராத் மாநிலம், ரூ. 8.08 கோடி மதிப்பில், ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், 11.66 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மகாராஷ்டிரா ரூ.4.52 லட்சம் கோடியுடன் 2ம் இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 0.03 சதவீதம் குறைவு. தமிழகம், 21.32 சதவீத அபரிமிதான வளர்ச்சி பெற்று, ரூ.3.52 லட்சம் கோடியுடன் 3வது இடத்தில் உள்ளது.
கோவையின் வளர்ச்சி
இதில் கோவை மாவட்டம், ரூ.23, 932 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், யு.ஏ.இ., உள்ளிட்ட நாடுகளுக்கு, அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், 2023--24ம் நிதியாண்டில் ரூ.27,686 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்திருந்தது. நடப்பு ஆண்டு ரூ.1,000 கோடிக்கு அதிகமாக, கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, 3.8 சதவீதம் அதிகமாகும்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் 'சைனா பிளஸ் ஒன்' நடவடிக்கைகளின் விளைவை, கோவை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருப்பதன் விளைவே இது என, தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வளர்ச்சி என்றில்லாமல், பல்வேறு துறைகளிலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. முழு நிதியாண்டில், ஏற்றுமதி மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என்பதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கன்வீனர், பிரபுதாமோதரன் கூறியதாவது:
கோவையின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக, உற்பத்தித் துறை சார்ந்து மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தச்சூழலில், உற்பத்தித் துறை ஏற்றுமதி குறிப்பாக, 'சைனா பிளஸ் ஒன்' வாய்ப்பால், இன்ஜினீயரிங் மற்றும் ஜவுளித்துறைக்கு ஆர்டர் அதிகரித்து வருவதால், கோவையின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில், உலகத் தரத்திலான சாயமேற்றும் ஆலைகள் கொண்ட தொழிற்பூங்கா அமைந்தால், நூற்பாலைகள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் புது முதலீடுகளை ஈர்த்து, ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியை, மேலும் அதிகரிக்க முடியும்.
துணி, பெட்லினன் மற்றும் டவல் போன்ற வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியில் தமிழகம் 21 சதவீத பங்களிப்பையும், ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 41 சதவீத பங்களிப்பையும் தருகிறது. கோவைப்பகுதியில் இத்துறை சார்ந்து கூடுதல் கவனம் செலுத்தினால், ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.