UPDATED : ஜூலை 03, 2024 05:57 PM
ADDED : ஜூலை 03, 2024 04:34 PM

கோவை: கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் கல்பனா கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனும் ராஜினாமா செய்தார்.
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளில், தி.மு.க., தலைமை எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை. மேயராக கல்பனா பொறுப்பேற்றதில் இருந்து, மாநகராட்சி கமிஷனர்களாக இருந்த ராஜகோபால் சுங்கரா, பிரதாப் உள்பட அனைத்து அதிகாரிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். அதேபோல, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடனும் மோதினார்.
இந்நிலையில், இன்று(ஜூலை 03) கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வேறு ஒருவர் மூலமாக வழங்கியுள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் கல்பனா கூறியுள்ளார்.
பாதியில் பதவி விலகல்
கல்பனா இரண்டு ஆண்டுகள், 4 மாதங்கள் மேயராக பதவி வகித்திருக்கிறார். தி.மு.க.,வை சேர்ந்த முதல் பெண் மேயரான இவர், ஐந்தாண்டுகள் முழுமையாக பதவி வகிக்காமல், இடைப்பட்ட காலத்திலேயே பதவி விலகி உள்ளார்.
நெல்லை மேயரும் ராஜினாமா
நெல்லை மாநகராட்சி மேயர் சரணவனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை கமிஷனரிடம் கொடுத்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பின்னணி
தி.மு.க, மேயர் சரவணன் மீது, பல்வேறு புகார்களை, ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள், கட்சி தலைமைக்கு தெரிவித்தனர். ஏற்கனவே, சரவணன் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர, 35க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினர். நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது, கடந்த ஜனவரியில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் நேருவும், திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இணைந்து, கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கவுன்சிலர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, அவர்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
அதன்பின் நடந்த மாநகராட்சி கூட்டங்களில், தொடர்ந்து மேயர் சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நீடித்தது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திற்கு, 10 கவுன்சிலர்கள்தான் வந்தனர். பெரும்பான்மையின்றி கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அறிவாலயத்துக்கு வரவழைக்கப்பட்ட மேயர் சரவணனிடம், கட்சித் தலைமை ராஜினாமா கடிதம் பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.