ADDED : பிப் 21, 2025 06:39 AM

கோவை : ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் மீது, கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
சமூக வலைதளங்களில் சட்ட விரோத கருத்துகளை பதிவு செய்வோர், அவதுாறு கருத்துகள் பரப்புவோர், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் பதிவிடுவோரை கண்காணித்து வழக்கு பதிவு செய்ய, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவை போலீசார் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர். அப்போது, வங்கதேசத்தில் கிருஷ்ணர் கோவில் இடிப்பு தொடர்பாக ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதைப் பார்த்த போலீசார் செல்வபுரம் போலீசில், ஹிந்து - முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை துாண்டும் வகையில் எக்ஸ் பக்கத்தில், அர்ஜுன் சம்பத் பதிவிட்டுள்ளார் என புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் அர்ஜுன் சம்பத் மீது, கலவரத்தை ஏற்படுத்துதல், தவறான தகவலை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
காடேஸ்வரா மீது வழக்கு
கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி, கடந்த 14ம் தேதி பா.ஜ., சார்பில் ஆர்.எஸ்., புரத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பல்வேறு ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மத கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கடந்த 18ம் தேதி கோவை, ஆர்.எஸ். புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் வந்தார். அப்போது, அவருக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்ட ஹிந்து அமைப்பினர் திரண்டனர்.
இதையடுத்து, அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்ட 11 பேர் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.