கோவை போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் விபரீதம்; அதிகாரிகள் அதிர்ச்சி!
கோவை போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் விபரீதம்; அதிகாரிகள் அதிர்ச்சி!
ADDED : ஆக 06, 2025 11:57 AM

கோவை; கோவை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., அறையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக கூறிய போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், அடுத்தடுத்து போலீசார் தொடர்புடைய சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இன்று கோவை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும், ஸ்டேஷன் முதல் மாடியில் இருக்கும் எஸ்.ஐ., அறையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளா்.
இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவர் (உயிரிழந்தவர் பெயர் ராஜன்) என்னை 25 பேர் துரத்துகின்றனர் என்று சொல்லி காவலரிடம் கூறுகிறார். உடனே காவலரும் வெளியே வந்து பார்க்கிறார். யாரும் இல்லை என்றவுடன் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று காவலர் அவரை அனுப்பிவிட்டு ஸ்டேஷன் உள்ளே சென்றுவிடுகிறார்.
அலுவல் காரணமாக ஸ்டேஷனில் போனுக்கு பதிலளிக்க வந்துவிடுகிறார். அந்த இடைவெளியில், ஸ்டேஷனுக்குள் புகுந்த அந்த நபர், மாடிப்படியேறி குற்றப்பிரிவுக்கு சென்று விடுகிறார். அங்கு எஸ்ஐ(க்ரைம்)அறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.
காலையில் ரோல்கால்(Roll call) முடித்துவிட்டு க்ரைம் எஸ்ஐ மேலே சென்று அறையை திறக்க முயற்சிக்கிறார். அப்போது உள்ளே யாரோ இருப்பதாக எண்ணி கொஞ்சநேரம் காத்திருக்கிறார். அதன்பிறகு அவர் கதவை பலமாக தட்டி பார்க்கும் போது உள்ளே ஒருத்தர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடுத்தியிருந்த வேட்டியை பயன்படுத்தி காற்றாடியில் தொங்கியபடி தற்கொலை செய்திருக்கிறார்.
சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவார். பின்னர் தற்கொலை செய்தவர் யார் என்று சிசிடிவியை வைத்து அடையாளம் காணும்போது, அந்த குறிப்பிட்ட நபர், ஒரு பஸ்சில் வந்து இறங்குகிறார். பின்னர் டவுன்ஹாலில் இரவு 11 மணிக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொள்கிறார்.
அதன் பிறகு அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவு 11.19 மணிக்கு வருகிறார். பின்னரே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அவரது பாக்கெட்டில் உள்ள டைரியில் உள்ள நம்பரில் சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து பேசும் போது, இறந்தவர் ராஜன் என்கிற அறிவொளி ராஜன். அவரின் ஊர் பேரூர் அருகில் உள்ள சாமிசெட்டிபாளையம்.
அவர் குடும்பத்தினரிடம் விசாரித்த போது, மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார். 10 பேர், 20 பேர் துரத்துகின்றனர் என்று கூறி உள்ளதாக தெரிவித்தனர். தற்போதுள்ள நிலவரப்படி சடலம் அரசு மருத்துவமனையில் உள்ளது.
மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவார். உதவி கமிஷனர் விசாரணை மேற்கொள்வார். இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் யாரெல்லாம் கவனக்குறைவாக இருந்துள்ளனரோ, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பவம் தொடர்புடையை சிசிடிவி காட்சிகள் விசாரணையில் உள்ளது. அவற்றை புலன் விசாரணை அதிகாரி பார்ப்பார். இறந்தவர் என்ன வேலை செய்கிறார் என்பன உள்ளிட்ட விசாரணைகள் இனிமேல் தான் நடத்தப்படும்.
தற்போதைக்கு இதுதான் போலீசுக்கு கிடைத்துள்ள தகவல்கள். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வர உள்ளனர். தான் கட்டிய வேட்டியில் அவர் தூக்கு மாட்டிக் கொண்டிருக்கிறார். சம்பவம் நடக்கும் போது காவலரை தவிர யாரும் அங்கு இல்லை.
பணியில் கவனக்குறைவாக உள்ள எல்லோரையும் உஷார்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ராஜன் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது இதுவரை தெரியவில்லை. விசாரித்த பின்னரே அதுவும் தெரிய வரும்.
இந்த சம்பவம் லாக்அப் டெத் என்று சொல்ல முடியாது. இது போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஒரு தற்கொலை. ஸ்டேஷனுக்கு கதவு இல்லை. பொதுமக்கள் வரவேண்டும் என்பதற்காக அப்படி வைத்திருக்கலாம். அதையும் இப்போது சரிசெய்து மாட்ட சொல்லி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.