கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காது! வந்தாச்சு சூப்பர் திட்டம்
கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காது! வந்தாச்சு சூப்பர் திட்டம்
ADDED : அக் 16, 2024 12:43 PM

கோவை: கோவையில் மழைநீர் வடிகாலுக்கு என்று ரோட்டின் கீழே நவீன தொழில்நுட்பத்தில் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
நகரமயமாக்கல்
பெருகி வரும் நகரமயமாக்கல் என்ற அம்சம், மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரும் பிரச்னைகளை உண்டாக்கி விடுகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இதுபோன்ற சிக்கல்களை அவ்வப்போது காணலாம்.
வாகன ஓட்டிகள்
மழையின் தாக்கத்தின் போது தலைநகர் சென்னை, மான்செஸ்டர் கோவை ஆகிய நகரங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் தேங்கி வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தி எடுத்துவிடும். வெயிலை இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் வெகுஜனத்தினர் என்னவோ, அதீத மழையை ஏற்க மறுக்கின்றனர்.
மழைநீர்
குறிப்பாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மழையின் போது நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சாகசமாக பயணிப்பதை பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால், அவிநாசி சாலை பழைய மேம்பால சுரங்கப்பாதை, மழைக்காலத்தில் பயன்படுத்தவே முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது.
வடிகால் பணி
இதுபோன்ற சம்பவங்கள் இனி நேராமல் இருக்க கோவை மாநகராட்சியானது நவீன தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. பிரிகாஸ்ட் என்ற தொழில் நுட்பத்தின் மூலம் இந்த பணி தொடங்கப்பட்டு உள்ளது. கட்டுமானப் பணிகளில் ஸ்மார்ட்டான, பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த வழி என்றால் பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தை கூறலாம்.
என்ன சிக்கல்
கோவை நகரப் பகுதியில் மழை பெய்தால் நஞ்சப்பா ரோடு, மில் ரோடு, ப்ரூக் பாண்ட் ரோடு ஆகிய வழித்தடங்களில் இருந்து மழை நீர் அவிநாசி ரோடு பழைய மேம்பால சுரங்கப் பாதைக்கு வந்து சேரும். தண்டவாளம் அமைந்துள்ள பகுதி வரை, ஆள் உயரத்துக்கு மேலாக தண்ணீர் தேங்குவதால் வாகனப் போக்குவரத்து தடை படுகிறது.இதன் காரணமாக அனைத்து வழித்தடங்களில் இருந்தும் வாகனங்கள் மேம்பாலத்தை கடக்கும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
வாலாங்குளம்
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் மாற்று வழித்தடத்தில் வாலாங்குளத்துக்கு கொண்டு செல்ல மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் திட்டமிட்டுள்ளார்.
கர்டர் பாக்ஸ்
முதல் கட்டமாக உப்பிலிபாளையம் பகுதியில் பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தில் இரண்டு மீட்டர் ஆழம், இரண்டு மீட்டர் அகலம் கொண்ட மழைநீர் கான்கிரீட் கர்டர் பாக்ஸ் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நிமிடத்தில் 5 லட்சம் லிட்டர் மழைநீரை வடிகாலில் இறக்கி, அரசு கல்லூரி வழியாக வாலாங்குளத்துக்கு கொண்டு செல்ல பணிகள் நடைபெறுகின்றன.
ரயில்வே பாலம்
நஞ்சப்பா ரோட்டில் இருந்தும்,அவிநாசி ரோடு புதிய மேம்பாலத்தில் இருந்தும் வழிந்தோடும் தண்ணீரும் இந்த புதிய வடிகால் மூலம் வாலாங்குளத்துக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் சிவானந்தா காலனி ரயில்வே பாலம் பகுதியிலும் சமீபத்தில் இரண்டு பஸ்கள் தண்ணீரில் சிக்கிய இடத்திற்கு அருகில் பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர் சங்கனூர் பள்ளத்துக்கு கொண்டு செல்ல இந் நடவடிக்கை எடுக்கப்படுகிறது
வருகிறது தீர்வு
நேரத்தை குறைத்து தேவையை அதிகரிக்கும் இந்த தொழில் நுட்பம் கோவை நகருக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.