ஹிந்துக்களை இழிவுபடுத்திய பாதிரியார்: கைது செய்ய பா.ஜ., வலியுறுத்தல்
ஹிந்துக்களை இழிவுபடுத்திய பாதிரியார்: கைது செய்ய பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2024 04:36 AM

சென்னை: 'ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தி பேசிய கோவை பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., தெரிவித்து உள்ளது.
அக்கட்சி அறிக்கை:
கோவை உப்பிலிபாளையம், பாதிரியார் பிரின்ஸ் கால்வின், ஹிந்து மதத்தினரின் நம்பிக்கைகளையும், காலம் காலமாக ஹிந்துக்கள் பின்பற்றி வரும் வாழ்வியல் முறையான, சனாதன தர்மத்தையும் இழிவுபடுத்தி பேசியுள்ளார்.
அவர் மீது, ஹிந்து முன்னணி உட்பட பலர் புகார் கொடுத்துள்ளனர். இரு மாதங்களுக்கு மேலாகியும், ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மனதை புண்படுத்திய ஒருவரை கைது செய்யாமல், முதல்வர் காலம் தாழ்த்தி வருகிறார்.
பாதிரியார் மன்னிப்பு கேட்டு, ஒரு காணொளியை வெளியிட்டு விட்டார் என்ற காரணத்திற்காக, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் வேண்டுமானாலும் மன்னிப்பு என்ற போர்வைக்குள் ஒளிந்து, பிற மதத்தினரின் நம்பிக்கையின் மீது கல்லெறிவதை அரசு ஊக்குவிக்கலாமா?
ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசுவதை சாதாரணமாக கடந்து போகும் முதல்வர் ஸ்டாலின், மற்ற மதத்தினரை பற்றி யாராவாது இவ்வாறு பேசியிருந்தாலும், இப்படி தான் அமைதி காப்பாரா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, மதநல்லிணக்கம், சகோதரத்துவத்தை பேணி பாதுகாக்கும் தார்மீக கடமையும், பொறுப்பும் தனக்கு உண்டு என்பதை உணர்ந்து, ஹிந்துக்களின் நம்பிக்கை களை இழிவுபடுத்தி பேசிய கோவை பாதிரியார் பிரின்ஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

