ADDED : டிச 12, 2024 09:46 AM

''அமைச்சருக்கும், மாவட்டச் செயலருக்கும்இடையே நடந்த உரசலை தீர்த்து வச்சுட்டாருப்பா...''என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அன்வர்பாய். ''விளக்கமா சொல்லுங்க...'' என்றார்,அந்தோணிசாமி.
''சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க.,வுல மீனவர் அணி, வழக்கறிஞர் அணி உட்பட ஏழு அணிகளுக்கு, சமீபத்துல மாவட்ட அமைப்பாளர்களை நியமிச்சிருக்காங்க பா...
''இவங்க எல்லாம், சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் ஆர்.டி.சேகர் ஆதரவாளர்களாம்... இதுல, அமைச்சர் சேகர்பாபு ஆட்களுக்கு இடமேதரல... அவர், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, புதிய நிர்வாகிகள் நியமனத்தை நிறுத்தி வச்சுட்டாரு பா...
''அறிவாலயத்துக்கு, 'பஞ்சாயத்து' போயிருக்கு... முதல்வரும், அமைச்சர் தரப்புக்கு மூணு, மாவட்டம் தரப்புக்கு நாலு நிர்வாகிகள்னு பிரிச்சுக் குடுத்து, பிரச்னையை தீர்த்து வச்சிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''வாகனங்களை பழுது பார்க்கறதுல ஊழல் நடக்கறது ஓய்...'' என்றகுப்பண்ணாவே தொடர்ந்தார்... ''சென்னை, ஆவடி போலீஸ் பட்டாலியனில்,காவல் போக்குவரத்து பணிமனை மற்றும் பயிற்சிப் பள்ளி இருக்கு...டி.ஜி.பி., - ஏ.டி.ஜி.பி.,- ஐ.ஜி.,க்கள், சென்னை,ஆவடி போலீஸ் கமிஷனர்கள் உட்பட எல்லா உயர் அதிகாரிகளுக்கும் அரசு வழங்கியவாகனங்களை இங்க தான்பழுது பார்க்கறா ஓய்...
''இதுக்காக, மெக்கானிக்,பிட்டர்னு 50க்கும் மேற்பட்டவா பணியில இருக்கா... இதுபோக, இந்த பணிமனையின் அங்கீகாரம் பெற்ற 10க்கும் மேற்பட்ட தனியார் ஒர்க் ஷாப்கள்லயும் வாகனங்களை பழுது பார்க்க விடறா ஓய்...
''இதை எல்லாம் மேற்பார்வையிடற பணிமனையின் உயர் அதிகாரி, ஒர்க் ஷாப் உரிமையாளர்களுடன் கூட்டணி போட்டுண்டு, செய்யாத வேலைகளை செய்ததாகவும், உதிரி பாகங்கள் வாங்கி மாட்டியதாகவும் போலி 'பில்'களை வச்சு, காசு பார்த்துடறார் ஓய்...
''இதுலயே, மாசத்துக்கு பல லட்சம் ரூபாய் தேத்திடறார்... கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷமா, இங்கயே பணியில இருக்கற இவரை யாராலும் அசைக்க முடியல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கட்சியில பதவி வாங்கித் தர்றதா, வசூல் வேட்டை நடக்குல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி. ''தி.மு.க.,விலா, அ.தி.மு.க.,விலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''அதான் இல்ல... சமீபத்துல துவங்கிய, தமிழக வெற்றிக் கழகத்துல தான் இந்த கூத்து நடக்கு வே...
''இந்த கட்சியின் கோவை கிழக்கு மாவட்ட புள்ளியும், மாணவர் அணி புள்ளியும் சேர்ந்து, கட்சியில் புதுசா சேரும் விஜய் ரசிகர்களிடம் பொறுப்பு வாங்கித் தர்றதா வசூல்நடத்துதாவ... அதாவது,மாவட்ட பொறுப்பு வாங்கித் தர 10,000 ரூபாயும், அணியில பொறுப்பு வாங்கித் தர, 5,000 ரூபாயும் வாங்குதாவ வே...
''இதுல ஒருத்தர் எல்.ஐ.சி., ஏஜென்டா வேற இருக்கிறதால, கட்சியினரிடம், 'பாலிசி எடுங்க'ன்னு நச்சரிச்சு, இதுவரைக்கும் 500 பேரிடம் பாலிசி பிடிச்சிட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''அது சரி... திராவிடகட்சியினரையே துாக்கிசாப்பிட்டுருவா போலிருக்கே...'' என்ற குப்பண்ணாவே, ''யுவராஜ், மகேஷ் இப்படி உட்காருங்கோ...நாங்க கிளம்பறோம் ஓய்...'' என, நண்பர்களுக்கு இடம் தந்தபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.