தடையை மீறி செயல்படும் குவாரிகள்; கலெக்டர் உத்தரவுக்கு மதிப்பில்லை!
தடையை மீறி செயல்படும் குவாரிகள்; கலெக்டர் உத்தரவுக்கு மதிப்பில்லை!
UPDATED : டிச 07, 2024 06:34 AM
ADDED : டிச 07, 2024 03:42 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கலெக்டர் உத்தரவிட்ட பிறகும் செயல்பட்ட கல்குவாரிக்கு மீண்டும் தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் 2022 மே 14ல் இடிபாடுகளில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் பலியாயினர். இச்சம்பவத்திற்கு பிறகு 53 குவாரிகளையும் செயல்பட தடைவிதித்து அப்போதைய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.அதிக விதிமீறல் உள்ள 24 குவாரிகளுக்கு ரூ. 262 கோடி அபராதம் விதித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் ரிஷப் உத்தரவிட்டார். ஆனால் தற்போது விதி மீறல் குவாரிகள் உட்பட அனைத்து குவாரிகளும் மீண்டும் இயங்குகின்றன.
5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்த குவாரிகள் ஒரு ஆண்டிலேயே முழு கொள்ளளவு கனிம வளத்தையும் தோண்டி எடுத்து விட்டால் அதன் பிறகு அவர்கள் கனிமவளம் தோண்டக்கூடாது என உத்தரவு உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெருங்குடியில் ஸ்டான்லி ராஜா என்பவரது கல்குவாரியில் 5 ஆண்டுகளுக்கு உரிய கனிம வளத்தை ஒன்றரை ஆண்டுகளில் தோண்டி எடுத்து விட்டதால் இனி தோண்டக்கூடாது என நவம்பரில் கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அதையும் மீறி குவாரி பணி நடந்தது. சென்னை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் குவாரி தடை விதிக்கப்பட்ட பிறகும் செயல்படும் வீடியோ, படங்கள் ஆதாரத்துடன் மீண்டும் கலெக்டர் கார்த்திகேயனுக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து நேற்று கலெக்டர், அந்த குவாரிக்கு மீண்டும் தடை விதித்துள்ளார்.
ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில் '' 53 குவாரிகளிலும் விதி மீறல் உள்ளதாக அப்போதைய கலெக்டர் விஷ்ணு புகார் தெரிவித்தார். அதிகபட்ச விதி மீறல் உள்ள 24 குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து குவாரிகளிலும் விதிமீறல் தொடர்கிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கனிம வளம் சுரண்டப்படுவதோடு அரசுக்கும் கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படுகிறது விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது'' என்றார். இதுகுறித்து கலெக்டர் கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.