கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் பாஜ தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் பாஜ தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
UPDATED : நவ 03, 2025 08:16 PM
ADDED : நவ 03, 2025 03:02 PM

கோவை: கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜ சார்பில் இன்று (நவ., 03) மாலை கோவையில் தீப்பந்தம் ஏந்தி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு (நவ.,02) தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தீப்பந்தம் ஏந்தி
கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழக பாஜ சார்பில் இன்று (நவ., 03) மாலை கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜவினர் தீப்பந்தம் ஏந்தி வந்தனர்.
பிற மாவட்டங்களில் நாளை மறுநாள் தமிழக பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இது குறித்து நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கோவை விமான நிலையம் பின்புறம் 19 வயது முதலாம் ஆண்டு படிக்கிற பெண், அவர் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, 3 பேர் அந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கோவையில் மாணவிக்கு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது, எல்லா பெற்றோர்களையும் கண்கலங்க வைப்பதோடு, பதைபதைக்கவும் வைக்கிறது. நாளை மறுதினம் 5ம் தேதி பிற மாவட்டங்களிலும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போகிறோம். பாஜ கட்சி என்றைக்கும், பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் நாங்கள் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவாகவும் இருப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

