பெருங்குடல் புற்றுநோய்: யோகா மருத்துவத்தில் நிவாரணம்
பெருங்குடல் புற்றுநோய்: யோகா மருத்துவத்தில் நிவாரணம்
ADDED : ஆக 14, 2025 03:18 AM
சென்னை:பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு, ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால், வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் ஒய்.தீபா, ரமேஷ் சிவகுமார், சோனி தர்ஷினி ஆனந்தம், கே.மகேஷ்குமார் ஆகியோர், தங்கள் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
உலகளவில் பெருங்குடல் புற்றுநோய், பெரும் அச்சுறுத்தலான நோய்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த பாதிப்புக்கு, 'கீமோதெரபி' மற்றும் மருந்துகள் வாயிலாக சிகிச்சைகள் வழங்க வேண்டியது அவசியம். அதில் சில எதிர்விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
பக்க விளைவு பாதிப்புகளை தடுக்கவும், சிகிச்சையின் பலனை மேம்படுத்தவும், ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை, நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 48 வயதான பெருங்குடல் புற்றுநோயாளி, நான்காம் நிலை பாதிப்புடன், அரசு யோகா இயற்கை மருத்துவமனையில், 2024 அக்., மாதம் அனுமதிக்கப்பட்டார். அவரது இடுப்புக்கு கீழே கடுமையான வலி, ஆசனவாயில் ரத்தக் கசிவு, ஜீரண மண்டல பாதிப்புகள், எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்னைகள் இருந்தன.
புற்றுநோய்க்கான சிகிச்சைகளுடன், அவருக்கு பல்வேறு ஆசனங்களும், நாடி சுத்தி பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. குறிப்பாக அர்த்த உத்தனபாதாசனம், சேது பந்தாசனம் உட்பட பல்வேறு ஆசனங்களும், பிரணாயாம பயிற்சியும் வழங்கப்பட்டது. அதனுடன் மண் குளியல் சிகிச்சை, நீர் சிகிச்சை, அக்குபிரஷர், மசாஜ், மூலிகை பூச்சு ஆகிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அதன் பயனாக, அவருக்கு வலி குறைந்தது. ரத்தப் போக்கு, ஜீரண மண்டல பாதிப்பு, உடல் சோர்வு உட்பட, பல்வேறு பாதிப்புகள் குறைந்தன. இந்த சிகிச்சை முறையை பலருக்கு விரிவுபடுத்தும்போது, அதன் நுட்பமான பலனை கண்டறிய முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.