ADDED : ஜன 04, 2024 05:03 AM

வால்பாறை: தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை 'ட்ரோன்' கேமிரா வாயிலாக கண்காணித்து, 5 மணி நேரத்திற்கு பின், தாயுடன் வனத்துறையினர் சேர்த்தனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் முதல்பிரிவு பகுதியில், கடந்த, 29ம் தேதி தாயை பிரிந்த, 5 மாத குட்டி யானை தனியாக தவித்தது.
தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு காவலர்கள், மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாயை பிரிந்து மூன்று கி.மீ., துாரம் தள்ளி வந்தது தெரிந்தது.
தாயை பிரிந்த குட்டி, அங்கும், இங்கும் ஓடியதால் அதனை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்தனர். ஒரு வழியாக குட்டி யானையை மீட்டு, லாரியில் ஏற்றினர்.
![]() |
செயலர் பாராட்டு
இச்சம்பவத்தை, வனத்துறை செயலாளர் சுப்ரியாசாஹூ தனது 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தார். அதில், 'வால்பாறையில் தாயை பிரிந்து தவித்த குட்டியானையை வனத்துறையினர் தாயுடன் சேர்ந்துள்ளனர்' என, குறிப்பிட்டு, குட்டி யானை தாயின் அரவணைப்பின் உறங்கும் காட்சியை பதிவு செய்துள்ளனர்.
'வனத்தில் இருந்து வழி தவறி பிரிந்து வந்த குட்டியானையை தாய்க்கூட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது, 2023ல் மன நிறைவு நிகழ்வுடன் நிறைவடைந்துள்ளது,' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனதில் பதிந்த காட்சி!
மானாம்பள்ளி வனச்சரகஅலுவலர் மணிகண்டன் கூறியதாவது: பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் காலை, 8:30 மணிக்கு கூட்டத்தில் இருந்து பிரிந்த, 5 மாத குட்டி யானை ரோட்டில் அங்கும் இங்கும் ஓடி செல்வதை கண்ட மக்கள், வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற மனித - வன விலங்கு மோதல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள், குட்டியானையை மீட்டு, லாரியில் பாதுகாப்பாக ஏற்றினர். தாயை பிரிந்த குட்டியானை ஒரு புறம் தவிக்க, குட்டியை பிரிந்த யானை வனப்பகுதியில் சப்தம் எழுப்பிக்கொண்டே இருந்தது.
அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டதால், முதலில் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் 'ட்ரோன்' கேமிரா வாயிலாக, யானைகள் கூட்டம் இருக்கும் இடத்தை கண்டறிந்து, குட்டி யானையை தாயுடன் சேர்க்க, மதியம், 1:30 மணிக்கு அழைத்து சென்றோம்.
குட்டியின் சப்தம் கேட்டதும், 11 யானைகள் ஓடி வந்தன. அதை கண்டதும் வனத்துறையினர் பயந்து போனோம். ஆனால், குட்டியின் தும்பிக்கையை பிடித்து தாய் யானை இழுத்து சென்றதும் மற்ற யானைகள் அமைதியாகி பின் தொடர்ந்தன. இந்த காட்சி மனதில் இருந்து என்றுமே மறையாது. தாயுடன் குட்டி யானையை சேர்த்த மன நிறைவுடன் திரும்பினோம். இவ்வாறு, கூறினார்.