வருது...வருது... பொங்கல்; சிறப்பு ரயில்கள் என்னென்ன?: பட்டியல் வெளியிட்ட தெற்கு ரயில்வே
வருது...வருது... பொங்கல்; சிறப்பு ரயில்கள் என்னென்ன?: பட்டியல் வெளியிட்ட தெற்கு ரயில்வே
ADDED : ஜன 10, 2024 01:50 PM

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் என்னென்ன? என்பது குறித்து முழு விபரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. நாளை முதல் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், சென்னை - தூத்துக்குடி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்தது. வரும் ஜன.,15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் ஏதும் அறிவிப்பார்களா? நாம் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் மக்கம் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் குறித்து முழு விபரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
* தாம்பரம் - திருநெல்வேலி இடையே நாளை ஜனவரி 11ம் தேதி மற்றும் ஜனவரி 13, 16ம் தேதிகளிலும், திருநெல்வேலியிலிருந்து ஜன. 12, 14, 17ம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
* தாம்பரத்தில் இருந்து இரவு 9.50க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 11.15க்கு திருநெல்வேலி சென்றடையும். அதே போல் மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து பகல் 2.45க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 3.15க்கு தாம்பரம் வந்தடையும்.
* சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 14 மற்றும் 16ம் தேதிகளில் திருநெல்வேலி வரை சிறப்பு ரயிலும், மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 15 மற்றும் 17ம் தேதி விரைவு ரயில்கள் இயக்கப்படும்.
* சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜன.14, 16ம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06001) இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
* ஜன.15, 17ம் தேதிகளில் காலை 6.00 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06002) இரவு 08.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
முன்பதிவில்லா சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.

