ரிப்பன் மாளிகையில் கால்பந்து விளையாடிய கம்யூ., கவுன்சிலர்கள்; நூதன முறையில் எதிர்ப்பு
ரிப்பன் மாளிகையில் கால்பந்து விளையாடிய கம்யூ., கவுன்சிலர்கள்; நூதன முறையில் எதிர்ப்பு
UPDATED : அக் 30, 2024 01:07 PM
ADDED : அக் 30, 2024 09:07 AM

சென்னை: கால்பந்து மைதானத்தை தனியாருக்கு விடும் சென்னை மாநகராட்சியை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள், ரிப்பன் மாளிகையில் கால்பந்து விளையாடி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் இருக்கின்றன. மாநகராட்சிக்கான நிதி சுமையை குறைக்க நிலையான வருவாய் பகிர்வு அடிப்படையில் விளையாட்டு திடல்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட உள்ளது. 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.
இந்த திடலில் பயிற்சி பெற, ஒரு மணி நேரத்திற்கு, 120 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் வாயிலாக, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு, 93.31 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். அதாவது மைதானத்தை பராமரிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஆண்டுக்கு 2.3 கோடி கிடைக்கும்.
கம்யூ., எதிர்ப்பு!
மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் விமலா , ''கால்பந்து செயற்கை புல் விளையாட்டு திடல்களை தனியாருக்கு வழங்குவதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவர். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், இலவசமாக அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பதிலளிக்கையில், ''பராமரிப்பு செலவை ஈடு செய்வதற்காகவே, கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாடி வரும் வீரர்களுக்கு பயிற்சி மேற்கொள்வதற்கு இலவசம்,'' என்றார்.
கால்பந்து விளையாட்டு
கால்பந்து திடல் தனியாரிடம் ஒப்பந்தம் விடுவதற்கும், அவற்றில், ஒரு மணி நேரத்திற்கு 120 ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் பெண் கவுன்சிலர்கள், ரிப்பன் மாளிகை கட்டடத்தில், கால்பந்து விளையாடி எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலர்கள், பிரியதர்ஷினி, விமலா, சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, கால்பந்து விளையாடினர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வாபஸ்
சென்னையில் கால்பந்து மைதானங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றது.

