நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழர் மரபு: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழர் மரபு: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : மே 01, 2024 02:47 PM

சென்னை: நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்' என்பது தொல்காப்பிய நூற்பா!. நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!.
இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா ரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் 'நடுகல் விழா' தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
தமிழக அரசின் சார்பில், இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. போரில் உயிர் நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான்! அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழக அரசின் இந்த நடுகல் முயற்சி!. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.