ADDED : நவ 18, 2025 06:46 AM

சபரிமலை: சபரிமலையில் நேற்று அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. ஐயப்பனை தரிசிக்க காத்திருந்த பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். இதன் தொடக்கமாக நேற்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் முன்புறமுள்ள மணியை ஒலிக்க செய்த பின்னர், ஐயப்பன் சன்னதியின் தங்க கதவுகளை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. அப்போது தரிசனத்திற்காக காத்து நின்ற பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது.
தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். சன்னதி முன்புறமுள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7:30 மணிக்கு உஷ பூஜை, மதியம் 12:00 மணிக்கு களபாபிஷேகம், 12:30 க்கு உச்ச பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது.
மீண்டும் மதியம் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00மணிக்கு புஷ்பாபிஷேகம், 9:30 மணிக்கு அத்தாழபூஜை முடிந்து 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இது போன்ற பூஜை வரும் 40 நாட்களும் நடைபெறும்.
கார்த்திகை ஒன்றாம் தேதியான நேற்று அதிகாலை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். பெரிய நடை பந்தலில் பக்தர்கள் நிரம்பியதால் வரிசை சரங்குத்தி வரை நீண்டது.

