பஞ்சாமிர்தம் பற்றி அவதுாறு; இயக்குனருக்கு முன்ஜாமின்
பஞ்சாமிர்தம் பற்றி அவதுாறு; இயக்குனருக்கு முன்ஜாமின்
ADDED : அக் 01, 2024 05:54 AM

மதுரை : திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறாக கருத்து வெளியிட்டதாக பதிவான வழக்கில் சினிமா இயக்குனர் மோகனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் அனுமதித்தது.
சென்னையைச் சேர்ந்தவர் மோகன். திரவுபதி உள்ளிட்ட சில படங்களின் இயக்குனர். இவர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறான கருத்தை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக, பழநி அடிவாரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் மோகன் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்:
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது தான், பழனி பஞ்சாமிர்தத்தில் மாத்திரை கலப்பதாக தகவல் வெளியானது என மனுதாரர் கூறினார். நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
அரசு கவனமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கருத்து தெரிவித்தார். உள்நோக்கில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர்: மனுதாரரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர் மூன்று வாரங்களுக்கு பழநி அடிவாரம் போலீசில் ஆஜராக வேண்டும். எந்த சமூக வலைத்தளத்தில் முதலில் கருத்து தெரிவித்தாரோ அதிலேயே, 'சரிபார்க்காமல் கருத்து வெளியிட்டுவிட்டேன்' என வருத்தம் தெரிவித்து பதிவிட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.