வணிக காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தம்; மின் அடுப்புக்கு மாறி வரும் ஹோட்டல்கள்
வணிக காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தம்; மின் அடுப்புக்கு மாறி வரும் ஹோட்டல்கள்
ADDED : மார் 10, 2026 04:54 AM

சென்னை: தமிழகத்தில் உணவகங்களுக்கு, வணிக காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஹோட்டல் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
வீடுகளிலும் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய தாமதமாகிறது. நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் சராசரியாக 85 சதவீதம், இறக்குமதியை சார்ந்துள்ளது. இது, சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தட்டுப்பாடு
நாடு முழுதும் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விற்கின்றன.
வீடுகளில் இரு சமையல் காஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கலாம். வணிக பயன்பாட்டிற்கு தேவைக்கு ஏற்ப சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மேற்காசிய நாடுகளில் காணப்படும் போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டில் எரிபொரு ளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அதேசமயம், 'சமூக ஊடகங்களில் பரவும் எரிபொருள் பற்றாக்குறை குறித்த தகவல் தவறானது; ஆதாரமற்றது. நாட்டில் எரிபொருள் போதிய அளவில் கிடைக்கிறது; மக்கள் கவலைப்பட தேவையில்லை' என, வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் உணவகங்களுக்கு நேற்று முதல் வணிக காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. வீடுகளிலும் சிலிண்டர் வினியோகம் செய்வது தாமதமாகி வருகிறது. இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: வீடுகளில் ஒரு சிலிண்டர் வாங்கி, 15 நாட்களுக்கு பின், இரண்டாவது சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். அதற்கு ஏற்ப தற்போது இரண்டாவது சிலிண்டருக்கு பதிவு செய்தால், 'நீங்கள் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்' என்று, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது: உணவகங்களுக்கு, சமையல் காஸ் சிலிண்டர் தான் உயிர்நாடி. நேற்று முதல், உணவகங்களை உள்ளடக்கிய வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தை, காஸ் ஏஜன்சிகள் நிறுத்திவிட்டன.
இதனால், உணவகங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மின்சார அடுப்புக்கு மாறி வருகின்றன. எனவே, காலை, மாலையில் வசூலிக்கப்படும் உச்ச நேர மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.
வணிக சிலிண்டர் வினியோகத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அச்சம்
சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் பதில் கூறாமல் மவுனம் காப்பது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. இதற்கிடையே, உணவகங்களில் இரண்டு நாட்களுக்கு தேவையான சிலிண்டர்கள் மட்டுமே இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

