ரேஷன் ஊழியர் ஊதிய உயர்வு ஆய்வு செய்ய குழு நியமனம்
ரேஷன் ஊழியர் ஊதிய உயர்வு ஆய்வு செய்ய குழு நியமனம்
ADDED : செப் 16, 2025 11:59 PM
சென்னை:கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகளை ஆய்வு செய்ய, நிலைக்குழுவை நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள் போன்றவற்றை நடத்துகின்றன. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு வகை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதிய நிர்ணயம் குறித்த, நியாயமான அணுகுமுறையை உறுதி செய்ய, கூட்டுறவு துறை நிலைக்குழுவை நியமித்து உள்ளது.
இக்குழு, ஊதிய நிர்ணயம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்வது, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்துவது, திருத்தங்களை பரிந்துரை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இதன் தலைவராக, கூட்டுறவு துறையின் பட்ஜெட் மற்றும் திட்டமிடல் பிரிவு கூடுதல் பதிவாளர் இருப்பார்.
இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது நியமிக்கப் பட்டுள்ள குழு, ஊதிய உயர்வு பேச்சு நடத்துவது தொடர்பான வழிகாட்டுதலை வெளியிடும்.
'அதன் அடிப்படையில், தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, புதிய ஊதியம் தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதற்கு ஏற்ப ஊதிய உயர்வு, இந்த ஆண்டு டிசம்பருக்கும் வழங்கப்படும்' என்றார்.