ADDED : பிப் 18, 2024 05:28 AM
சென்னை : குற்ற வழக்குகளில் விடுதலை செய்யப்படுவோரின், வழக்குகளை ஆய்வு செய்ய, மாவட்ட மற்றும் மாநகர அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் விடுதலை செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்கள் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்ய, அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைக்கும்படி, 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
புலன் விசாரணையில் உள்ள குறைகளை அறியவும், அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கவும், வழக்கை திறனாக கையாளாத போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், வழிமுறைகளை உருவாக்கும்படியும், உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்ற வழிமுறைகளை அமல்படுத்த, அரசுக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் நடராஜன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
டி.ஜி.பி., தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 'உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், அரசின் அறிவுறுத்தலின்படி, அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், மாவட்டம் மற்றும் மாநகர அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.
'கடந்த ஆண்டில் விடுதலை செய்யப்பட்டவர்களின் வழக்குகள் மறுஆய்வு செய்யப்பட்டு, திறமையாக செயல்படாத 13 பேருக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது' என்று கூறப்பட்டது.
இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டது.