வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு நிவாரணம்: நடைமுறையை மாற்றியது அரசு
வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு நிவாரணம்: நடைமுறையை மாற்றியது அரசு
ADDED : பிப் 12, 2024 06:06 AM
உடுமலை: 'வன விலங்குகளால் பயிர் மற்றும் இதர சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்துக்கு, பிற துறையினர் பரிந்துரை பெறும் நடைமுறையை கைவிட்டு, நேரடியாக வனச்சரக அலுவலரே நிவாரணம் நிர்ணயித்து வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில், 22,877 சதுர கி.மீ., வனப்பரப்பு உள்ளது. அனைத்து பகுதிகளிலும், வனத்திலிருந்து வெளியேறும் விலங்குகளால், பயிர் சேதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வனத்துறை சார்பில் நிவாரணம் வழங்க, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை வாயிலாக பரிந்துரை பெறப்பட்டு, நிதி விடுவிக்கப்படுகிறது.
இந்த நடைமுறையில், கால தாமதம் உள்ளிட்ட நடைமுறை சிக்கல் உள்ளதால், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைப்பதில்லை என, புகார் எழுந்தது.
பிரச்னைக்கு தீர்வாக, வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாசரெட்டி, அனைத்து வனச்சரக அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:
வன விலங்குகளால், சாகுபடி பயிர் சேதமடைந்தால், நிவாரணம் வழங்க, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை பரிந்துரை பெற வேண்டியதில்லை. இதே போல, அசையா சொத்து பாதிப்புக்கும் பரிந்துரை தேவையில்லை.
மாறாக, சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலர், பாதிக்கப்பட்ட விளை நிலங்களை நேரடியாக ஆய்வு செய்து, பாதிப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன், நிவாரண தொகையை பரிந்துரைக்கலாம்.
காயமடைந்த மனிதர்களுக்கு, நிவாரணம் வழங்க, தேவையான மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். பயிர் சாகுபடி சேதம், அசையா சொத்து பாதிப்பு, மனிதர்கள் காயம் மற்றும் உயிரிழப்புக்கான நிவாரணத்தொகை அரசால் நிர்ணயித்து வனத்துறைக்கு தரப்பட்டுள்ளது.
அதன்படி, நிவாரணத்தொகையை உடனடியாக வனச்சரக அலுவலர்கள் பரிந்துரைக்கலாம். இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.