போலி கோப்பை காட்டி முதல்வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு
போலி கோப்பை காட்டி முதல்வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2023 06:41 AM

ராமநாதபுரம்: போலி கோப்பையைக் காட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரை ஏமாற்றிய வினோத்பாபு, 40, மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செவ்வனுாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத்பாபு, 40. 'வீல்சேர்' கிரிக்கெட் உலககோப்பைப்போட்டியில் வென்றதாக போலி ஆவணம், கோப்பையைக் காட்டி, முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
அவர் மீதும், உதவியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராமநாதபுரம் எஸ்.பி., தங்கதுரையிடம், ஏ.பி.ஜே., மிஷல் பாரா ஸ்போர்ட்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சரவணக்குமார், செயலர் டேவிட் வின்சென்ட் ராஜா ஆகியோர் மனு அளித்தனர்.
சரவணக்குமார் கூறியதாவது: இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் என்றும், 2022 ஆசிய கோப்பை போட்டியில் வென்றதாகவும் வினோத் பாபு, பயிற்சியாளர் உள்ளிட்டோர் போலியான ஆவணம் தயார் செய்துள்ளனர்.
அதை வைத்து அமைச்சர்கள் உதயநிதி, ராஜகண்ணப்பன் ஆகியோருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். பின் 2023ல் லண்டனில் நடந்த வீல் சேர் கிரிக்கெட் டி- 20 உலகக் கோப்பையை வென்றதாக கூறி முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
போலி கோப்பை, ஆவணம் மூலம் முதல்வர் வரை ஏமாற்றிய வினோத் பாபு, அவருக்கு உதவியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் உண்மையான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி வினோத் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.