ADDED : அக் 03, 2025 02:00 AM
சென்னை: லஞ்சம் வாங்கியதை அம்பலப்படுத்தியதால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள், 45 நாட்களாக 'டார்ச்சர்' செய்வதால், இந்தியாவில் தங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணியை நிறுத்திக் கொள்வதாக, 'வின்ட்ராக் இன்க்' நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் சார்பில், 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
இந்த மாதம், 1ம் தேதியில் இருந்து, எங்களின் வின்ட்ராக் இன்க் நிறுவனம், இந்தியாவில் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்கிறது.
கடந்த 45 நாட்களாக, சென்னை சுங்கத்துறை அதிகாரிகளால் நியாயமற்ற முறையில் துன்புறுத்தப்படுவதால், இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டது.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே, லஞ்சம் வாங்கியதை அம்பலப்படுத்தியால், வணிகத்தை நடத்த முடியாமல் கடுமையாக பழி வாங்கும் நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறோம். எனினும், எங்களின் திறமை மற்றும் கடுமையான முயற்சியை பயன்படுத்திய போதிலும், தொடர் அழுத்தம் காரணமாக செயல்பாடுகளை தொடர இயலவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'வின்ட்ராக் இன்க்' நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை, சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
அந்த நிறுவனம், எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும், இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.