ஹிந்து மதத்தை விமர்சித்த இயக்குனர் ரஞ்சித் மீது புகார்
ஹிந்து மதத்தை விமர்சித்த இயக்குனர் ரஞ்சித் மீது புகார்
ADDED : ஆக 06, 2024 05:33 AM

சென்னை : பாரத் ஹிந்து முன்னணி வடசென்னை மாவட்ட தலைவர் யுவராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சினிமா இயக்குனர் ரஞ்சித் மீது, நேற்று ஒரு புகார் அளித்துள்ளார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: இயக்குனர் ரஞ்சித் தனியார் யுடியூப் பேட்டியில், 'நான் படித்த பள்ளியின் எதிரில் ஒரு நந்தி இருக்கும். அந்த கல் மீது ஏறினால், வானத்து மேல் பறந்து விடலாம் எனக் கூறுவர். அதன் மேல் ஏறி நின்று பார்த்தேன்.
வானத்தில் பறக்கிறேனோ, இல்லையோ முயற்சி செய்வேன். புத்தகம் மீது ஏறி நின்றால் படிப்பு வராது என்று கூறுவர்; நான் வேண்டுமென்று ஏறி உட்கார்ந்து பார்ப்பேன். சின்ன வயதில் அதை எல்லாம் செய்திருக்கிறேன்.
அதேபோல் சாமி கல்லு மூன்று நட்டு வச்சிருப்பாங்க. அதுமேல ஏறி நின்னு இருக்கேன்' என, பேசிய வீடியோவை பார்த்து அதிர்ந்தேன்.
உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள், நந்தி வடிவில் உள்ள ஈசனை வணங்கும் பக்தர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. படிப்பிற்கு தாயாக விளக்கும் சரஸ்வதி தேவியை, ஆண்டுதோறும் விஜயதசமியன்று, புத்தகங்களை வைத்து மக்கள் வணங்குகின்றனர்.
கிராமங்களில் முனீஸ்வரன், பெண் தெய்வங்களை குலசாமியாக, மூன்று கல் வைத்து வணங்குகின்றனர். இதை இழிவுபடுத்தும் விதமாக இயக்குனர் ரஞ்சித், கேவலப்படுத்தி பேசி, ஹிந்துக்கள் மனதில் ரணத்தை ஏற்படுத்தி உள்ளார். ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து மத வெறுப்பு வீடியோவை யுடியூபில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.