UPDATED : ஜூலை 28, 2011 08:50 AM
ADDED : ஜூலை 27, 2011 06:21 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தி.மு.க., நகராட்சி துணை தலைவர் மீது, நில அபகரிப்பு செய்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை, ஆனைக்கட்டி தெருவை சேர்ந்த, ரஜினி என்ற பெண் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பச்சியப்பன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்.
தந்தை புருஷோத்தமன் எனக்கு ஆனைக்கட்டி தெருவில், 500 சதுர அடி கொண்ட கட்டிடம் கொடுத்தார். அந்த இடத்துக்கு பட்டா, சிட்டா, வரி ரசீதுகள் 1987ம் ஆண்டில் என்னுடைய பெயருக்கு மாற்றி கொண்டேன்.கடந்த ஆண்டு, திருவண்ணாமலை தி.மு.க., நகராட்சி துணை தலைவர் செல்வம், என் கடைக்கு முன், இயங்கி வந்த ஹோட்டலை, சேலம் ஏ.வி.ஆர்., ஜூவல்லரிக்கு வாங்கிக் கொடுத்தார்.என் இடத்தையும் அடிமாட்டு விலைக்கு கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால், 2010ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி இரவு, ஏ.வி.ஆர். ஜூவல்லரி உரிமையாளர்கள் சஞ்சய், ரமேஷ் மற்றும் தி.மு.க., நகராட்சி துணை தலைவர் செல்வம் ஆகியோர் அடியாட்களுடன் வந்து ஹோட்டலை இடித்தனர். எனது கடையையும், ஹோட்டலையும் ஒரே சுவரில் சேர்த்து கட்டியிருந்ததால், கடையின் மேற்கூரை இடித்து தரை மட்டமாக இருந்தன. அது பற்றி நான், போலீசில் புகார் அளித்தேன். தி.மு.க., வை சேர்ந்தவர்கள் என்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.என்னை மிரட்டி, கட்டிடத்தை இடித்தவர்கள் மீதும், என்னுடைய கடைக்கு செல்ல முடியாமல் தடுப்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.