UPDATED : பிப் 22, 2024 04:07 AM
ADDED : பிப் 22, 2024 02:55 AM

திருச்சி:ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் சாலையில், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. இந்த மடத்தில் தற்போது, பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயராக உள்ளார்.
இவர், மடத்தின் சொத்துக்களை மீட்க முயற்சிக்கிறார். ஜீயர், திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, மடத்தின் சொத்துகளை மீட்க புகார் அளித்தார்.
இது குறித்து, மடத்தின் ஜீயர் தரப்பு வக்கீல் ஸ்ரீராம் கூறியதாவது:
புதிய ஜீயர், மடத்தின் சொத்துக்களை மீட்க முயற்சிக்கிறார். அதை சிலர் தடுக்கின்றனர். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒருவர், மடத்தின் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 50,000 சதுரடி இடத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்த நபர் தற்போது, ஜீயருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். மடத்தில் ஏற்கனவே பணிபுரிந்த கோவிந்த ராமானுஜம் என்பவர், மடத்திற்கு சொந்தமான இடங்களை போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.