ADDED : பிப் 18, 2024 06:35 AM

சென்னை : பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்க, அனைத்து மாவட்டங்களிலும், உள்ளூர் புகார் குழுக்கள் இயங்குவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2013ல் இயற்றப்பட்டது. பஞ்சாலைகள், நுாற்பாலைகளில் பணியாற்றும் பெண்கள், பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதால், அனைத்து மாவட்டங்களிலும் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய, கலெக்டர்களுக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அனைத்து மாவட்டங்களிலும், உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, இயங்கி வருவதாகவும், மாவட்ட அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த குழுக்கள், புகார்களை பெறுவதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிறுவனங்களில், 10 பேருக்கு மேல் பணியாற்றினால், உள்விசாரணைக் குழு அமைக்க, அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணையை, மார்ச் 22க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.