காலை உணவு திட்டத்துக்கு அதிக கவனம்; மதிய உணவு திட்டத்துக்கு இல்லை என புகார்
காலை உணவு திட்டத்துக்கு அதிக கவனம்; மதிய உணவு திட்டத்துக்கு இல்லை என புகார்
ADDED : ஜூன் 16, 2025 06:17 AM

மதுரை,: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் மீதான கண்காணிப்பு, மதிய சத்துணவுத் திட்டத்தில் இல்லை.
சத்துணவு அமைப்பாளர்கள் பற்றாக்குறை, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கண்காணிப்பு இல்லாததால், முழுமையான உணவு கிடைப்பதில்லை என புகார் எழுந்துஉள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய சத்துணவு திட்டம் அமலில் உள்ளது.
ஆய்வு இல்லை
இதுபோல முதல் வரின் காலை உணவுத் திட்டம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2022ல் துவங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
காலை உணவுத் திட்டம் தனியாராலும், மதிய உணவுத் திட்டம் சத்துணவு பணியாளர்களாலும் செயல்படுத்தப்படுகின்றன.
காலை உணவுத் திட்டத்தில் பெரும்பாலும் புகாரின்றி நடக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயன்பெறும் மதிய உணவுத் திட்டத்தில் உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்குவதில்லை.
இதை கண்காணிக்க வேண்டிய சத்துணவு அமைப்பாளர்கள் பற்றாக்குறையால், ஒருவர் நான்கு பள்ளிகளை கண்காணிக்க வேண்டியுள்ளது, ஒட்டுமொத்தமாக கண்காணிக்க வேண்டிய பி.டி.ஓ.,க்கள் மாதம் ஒருமுறைகூட பள்ளிகளில் ஆய்வு செய்வதில்லை என்பது போன்ற புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
உணவு பட்டியலில் அனைத்து நாட்களிலும் முட்டை இடம் பெறும். ஆனால், மசாலா முட்டை, மிளகு முட்டை, தக்காளி மசாலா முட்டை பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. இரண்டு மற்றும் நான்காவது வாரத்தில் எலுமிச்சை சாதத்துடன் தக்காளி முட்டை, சுண்டல் வழங்க வேண்டும்.
விறகு அடுப்பு
இதில், சுண்டல் தனியாக வேகவைத்து கொடுக்க வேண்டும். ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகள் தவிர பெரும்பாலான அரசு பள்ளிகளில் தருவதில்லை.
அனைத்து வெள்ளியும் வறுத்த உருளைக்கிழங்கு வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. அரசு உத்தரவுப்படி, சிலிண்டரில் தான் சமைக்க வேண்டும். பல பள்ளிகளில் இன்னும் விறகு அடுப்பு தான் பயன்படுத்துகின்றனர். காலை உணவுத் திட்டத்தை கண்காணிக்கும் அளவிற்கு மதிய சத்துணவு திட்டத்தில் கண்காணிப்பு இல்லை.
மதிய உணவு தொடர்பாக பல்வேறு புகார்கள் அரசின் கவனத்திற்கு வராமல், ஆளுங்கட்சியினரால் மூடி மறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.