ADDED : ஜன 18, 2024 02:40 AM
சென்னை:
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் ஆயுள் தண்டனை கைதிக்கு நிபந்தனையுடன் கூடிய இரண்டு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருபவர் பால்துரை 70.
அறிவுரை குழும பரிந்துரைப்படி தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பால்துரை வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பால்துரையின் கோரிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்கும்படி கடந்தாண்டு அக்டோபரில் உத்தரவிட்டது.
அதன்படி தன் கோரிக்கையை அரசு மற்றும் சிறைத்துறை பரிசீலிக்கவில்லை என்பதால் இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது சைபுல்லா மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டு மூன்று மாத காலமாகிவிட்டது.
ஆனால் இதே வழக்கில் சிறையில் உள்ள மற்ற குற்றவாளி கடந்தாண்டு டிசம்பரில் நீதிமன்ற உத்தரவின்படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வரை இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் 'இம்மாதம் 31க்குள் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்கும். அதுவரை கால அவகாசம் வேண்டும்' என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் உடன் கைதான குற்றவாளி விடுதலை அரசு சார்பில் கூடுதல் அவகாசம் கோருவதை கருத்தில் கொண்டு இரண்டு மாத காலம் மனுதாரருக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. விசாரணை பிப்.5க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.