ADDED : பிப் 13, 2024 10:28 AM

சென்னை: சட்டசபையின் 2வது நாள் அமர்வில், மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏ.,க்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபை நேற்று (பிப்.,12) கவர்னர் உரையுடன் துவங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இருப்பதால் அதனை வாசிக்க மறுப்பு தெரிவித்து, 3 நிமிடங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையை முடித்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று 2வது நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள் ஆர்.வடிவேல், எ.தெய்வநாயகம், எம்.தங்கவேல், துரை ராமசாமி, எஸ்.ராஜசேகரன், கு.க.செல்வம், மறைந்த ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் எஸ்.வெங்கிடரமணன், மறைந்த தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் கவர்னருமான ராஜேந்திரன், மறைந்த தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் ஆகியோருக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.