தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் மோதல்: தமிழிசையுடன் உதயநிதி வார்த்தைப்போர்!
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் மோதல்: தமிழிசையுடன் உதயநிதி வார்த்தைப்போர்!
ADDED : அக் 19, 2024 05:38 PM

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில், தமிழிசை - உதயநிதி இடையே வார்த்தைப்போர் வெடித்துள்ளது.
நேற்று கவர்னர் ரவி பங்கேற்ற தூர்தர்ஷன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது பெரிய பிரச்னையாக உருவாக்கப்பட்டது. இதற்காக கவர்னரை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் அறிக்கை வெளியிட்டனர்.
உடனடியாக கவர்னர் ரவி மற்றும் கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் இன்னும் முடியவில்லை. இன்றும் கவர்னரை கண்டித்த தி.மு.க.,வை விமர்சித்தும், அதற்கு பதில் கொடுத்தும் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
முயற்சி
இந்நிலையில், கோவையில் நிருபர்களை சந்தித்த பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: பா.ஜ.,வினர் மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார். அதன் வெளிப்பாடு தான், பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதம். நாம் தான் தமிழ் பற்றாளர்கள் என்று பொய்யான ஒரு தமிழ்ப்பற்றை சொல்லி இதுவரை மக்களை ஏமாற்றினோம். இனிமேலும் ஏமாற்ற வேண்டும் என்ற ஒரு அவசரம் தெரிகிறது. அவரின் சமூக வலைதளப்பதிவும் அப்படித்தான்.
தமிழ் மாதம் கொண்டாடுவோம். தமிழ்வாரம் கொண்டாடுவோம் தமிழை கொண்டாடுவோம். ஆனால் இன்னொரு மொழியை கொண்டாடுவதன் மூலம் தமிழ் சிறுமைப்படுத்தப்படுகிறது என்ற வாதத்தை மறுக்கிறேன். தமிழை சிறுமைப்படுத்த முடியாது. சிறப்புற தான் செய்ய முடியும்.
என்னை ஹிந்தி இசை என விமர்சிக்கின்றனர். எனது பெயரில் மட்டுமல்லாமல் உயிரிலும் தமிழ் உள்ளது. தி.மு.க., அமைச்சர் வீட்டு குழந்தைகள் எத்தனை பேர் தமிழ் படிக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபட்டது எனக்கு ஒப்புதல் கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்பட வேண்டும். ஆனால், உள்நோக்கம் இல்லாமல் செய்த ஒன்றை உள்நோக்கத்தோடு செய்தார்கள் என்று கற்பிப்பது தான் தவறு என்கிறேன்.
தெரியாமல் நடந்த ஒரு தவறு. அது நடந்து இருக்கக்கூடாது. தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும், சரியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பாடப்பட வேண்டும். கடமைக்காக செய்யக்கூடாது. இதை வைத்து பூதாகரமாக அரசியல் செய்கிறார்கள். இரட்டை வேடத்தை தான் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு தமிழிசை கூறினார்.
கோபம்
இதற்கு பதிலடி கொடுத்து துணை முதல்வர் உதயநிதி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்நாள் கவர்னர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் கவர்னருக்கு கோபம் வருகிறது! 'எல்லோருக்கும் எல்லாம்' என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட உங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் - ஆன்மிகமும் தமிழகத்தில் என்றைக்கும் கலக்காது.
மத்திய அரசின் 'டி.டி. தமிழை'ப்போல் - தமிழிசையும் ஹிந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! இவ்வாறு அந்த பதிவில் உதயநிதி கூறியுள்ளார்.