ஆக., 20ல் காங்., சிறப்பு பொதுக்குழு: கோஷ்டி தலைவர்களுக்கு அழைப்பு
ஆக., 20ல் காங்., சிறப்பு பொதுக்குழு: கோஷ்டி தலைவர்களுக்கு அழைப்பு
UPDATED : ஆக 12, 2026 05:29 AM
ADDED : ஆக 12, 2026 05:24 AM

- நமது நிருபர் -
சென்னையில், வரும் 20ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளையொட்டி, வரும் ஆக.20ம் தேதி, தமிழக காங்கிரசின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி தேர்தல் வியூகம், கட்சி அமைப்பை பலப்படுத்துதல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் குறித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் பேசுவார்கள் என தெரிகிறது.
காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, அதிக பொறுப்புகளை வழங்கி, புதிய தலைமுறையை காங்கிரசுக்குள் கொண்டு வர, மாணிக்கம் தாகூர் விரும்புகிறார். லோக்சபா தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகளில், மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது குறித்து, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பின், அனைத்து கோஷ்டி தலைவர்களும் கோஷ்டி பூசலை தவிர்த்து, ஒன்றாக செயல்படுவதை, கட்சி மேலிடத்திற்கு காட்டும் வகையில், அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
