மகனுக்கு மட்டும் வாழ்த்து; எம்.எல்.ஏ.,க்கள் நீக்கமா? ராமதாசின் ஓரவஞ்சனை என வன்னியர்கள் கோபம்
மகனுக்கு மட்டும் வாழ்த்து; எம்.எல்.ஏ.,க்கள் நீக்கமா? ராமதாசின் ஓரவஞ்சனை என வன்னியர்கள் கோபம்
UPDATED : ஜூலை 22, 2025 01:26 PM
ADDED : ஜூலை 22, 2025 12:21 AM

சென்னை: விழுப்புரத்தில் நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம், செய்தி தொடர்பாளர் பாலு ஆகியோரை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடைநீக்கம் செய்திருப்பது, வன்னியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதல் நீடித்து வரும் நிலையில், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், பதிலுக்கு ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க., அரசை கண்டித்து, நேற்று முன்தினம் விழுப்புரத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
'இது, தன் பலத்தைக் காட்ட அன்புமணி நடத்திய போராட்டம்' என, ராமதாஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இச்சூழலில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம், செய்தி தொடர்பாளர் பாலு ஆகியோரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து, அக்கட்சியின் தலைமை நிலைய செயலர் அன்பழகன், ராமதாஸ் உத்தரவுப்படி அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியது அன்புமணி. இந்தப் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி யார் போராடினாலும் வாழ்த்துவோம்' என ராமதாஸ் கூறினார்.
ஆனால், எந்த போராட்டத்திற்காக மகனுக்கு வாழ்த்து கூறினாரோ, அதே போராட்டத்தில் பங்கேற்ற மூன்று எம்.எல்.ஏ.,க்கள், செய்தி தொடர்பாளர் பாலு ஆகியோரை, ராமதாஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.
மகனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது ராமதாசின் ஓரவஞ்சனை என, அக்கட்சிக்குள் விமர்சனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவே, வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும் துவங்கப்பட்டது.
'வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக நடந்த தீவிர போராட்டங்களே ராமதாசை தலைவராக்கியது. ஆனால், வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் மூவர் மீது, ராமதாஸ் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
'இது, வன்னியர் களிடம் அதிருப்தியை ஏற்டுத்தியுள்ளது. இதை, ராமதாஸ் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றனர்.