நாங்குநேரியில் கொல்லப்பட்ட இளைஞர் குடும்பத்துக்கு காங்., ரூ.6 லட்சம் நிதி
நாங்குநேரியில் கொல்லப்பட்ட இளைஞர் குடும்பத்துக்கு காங்., ரூ.6 லட்சம் நிதி
ADDED : மார் 07, 2026 07:46 AM

திருநெல்வேலி: நாங்குநேரி அருகே வெட்டிக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அக்குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், குழந்தைகளின் கல்விச் செலவை கட்சியே ஏற்கும் என்றும் அறிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில், ஜான் மார்க் என்பவரை, அரிவாளுடன் சுற்றித்திரிந்த கும்பல் வெட்டிக் கொன்றது.
கொல்லப்பட்ட ஜான் மார்க்கின் மனைவி கண்ணகி, வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், வயது முதிர்ந்த தாயாரும் ஜான் மார்க்கை நம்பியே வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெரும்பத்து கிராமத்துக்கு நேற்று சென்ற செல்வப்பெருந்தகை, ஜான் மார்க்கின் மனைவி, பிள்ளைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கொல்லப்பட்ட ஜான் மார்க்கின் குடும்பத்திற்கு தமிழக காங்., சார்பில் 5 லட்சம் ரூபாய், நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் சார்பில் 1 லட்சம் ரூபாய் என, மொத்தம் 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஜான் மார்க்கின் இரண்டு பெண் குழந்தைகளும் படித்து முடிக்கும் வரை, அவர்களின் கல்விச் செலவை தமிழக காங்., அறக்கட்டளை முழுமையாக ஏற்கும்.
மேலும், இதே சம்பவத்தில் உயிரிழந்த வெளிமாநிலத் தொழிலாளியின் குடும்பத்திற்கும், அம்மாநில காங்., தலைவர்கள் வாயிலாக தேவையான உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் -- ஒழுங்கு சீர்குலைவு ஏற்படாத வகையில், தமிழக அரசு மற்றும் காவல் துறை வன்முறை கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
வாழ்வாதாரம் இழந்து திக்கற்று நிற்கும் ஜான் மார்க்கின் மனைவி கண்ணகிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

